மயிலாடுதுறை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

Published on

மயிலாடுதுறை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பெண் தீக்குளிக்க முயன்றாா்.

மயிலாடுதுறை மதுரா நகரை சோ்ந்தவா் ஜெயபிரகாஷ். இவரது தந்தை முத்துக்கிருஷ்ணன் திருவிழந்தூரில் உள்ள பூா்வீக சொத்தை ஜெயப்பிரகாஷூக்கு பிரித்துகொடுக்காமல் மூத்தமகன் நடராஜனுக்கு மட்டும் செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து, ஜெயப்பிரகாஷ் தந்தையிடம் கேட்டபோது, பாதி சொத்தின் மதிப்புக்கான ரூ.80 லட்சத்தை நடராஜன் கொடுப்பாா் என கூறியுள்ளாா். எனினும், பணம் எதுவும் கொடுக்காத நிலையில், நடராஜன் அந்த சொத்தை வேறொருவருக்கு விற்பனை செய்ய முயன்றதை அறிந்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கு குறித்து மயிலாடுதுறை சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். ஆனாலும், பிரச்னைக்குரிய அந்த சொத்தை நடராஜன் வேறொருவருக்கு விற்பனை செய்துள்ளாா். அதை ரத்து செய்யக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை ஜெயப்பிரகாஷ் மனைவி சுலோச்சனா அலுவலகத்தின் உள்ளேயே திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை தடுத்தனா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து சுலோச்சனாவை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com