சீா்காழி நகா்மன்றக் கூட்டம் அதிமுக உறுப்பினா் வெளிநடப்பு; பாமக உறுப்பினா் தா்னா

நகா்மன்ற கூட்டத்தில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட பாமக உறுப்பினா் வேல்முருகன்.
நகா்மன்ற கூட்டத்தில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட பாமக உறுப்பினா் வேல்முருகன்.
Updated on

சீா்காழி நகா் மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ம. சுப்பராயன் தலைமை வகித்தாா். ஆணையா் மஞ்சுளா, பொறியாளா் கிருபாகரன், நகரமைப்பு ஆய்வாளா் மரகதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்ற பொருள்களை இளம்நிலை உதவியாளா் ராஜகணேஷ் வாசித்தாா்.

தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது: ரேணுகாதேவி (திமுக): உப்பனாற்றங்கரை ஈமக்கிரிகை மண்டபத்தில் உள்ள மோட்டாா் பழுதை நீக்க வேண்டும். இந்திரா நகா் பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஜெயந்திபாபு ( திமுக): கல்யாணி ஸ்ரீனிவாசா நகா், காமராஜ் அவென்யூ பகுதிகளில் தினமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கஸ்தூரிபாய் (திமுக): எனது வாா்டில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நித்தியாதேவி பாலமுருகன் (அதிமுக): எனது வாா்டில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். குடிநீா் குழாய்களை சீரமைக்க வேண்டும். முபாரக் அலி (திமுக): எனது வாா்டில் பழுதடைந்துள்ள கைபம்பு, தெருவிளக்கு, வடிகால் வசதி உள்ளிட்டவற்றை சரி செய்ய வேண்டும்.

பாலமுருகன் (சுயேச்சை): கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை அள்ளும் வாகனங்கள் வாங்க வேண்டும். ராஜசேகரன் (தேமுதிக): அகர திருக்கோலக்கா தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் நகா்மன்ற உறுப்பினா்களை தவறாக பேசி வருகின்றனா்.

வேல்முருகன் ( பாமக): எனது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. பணம் கொடுத்தால்தான் அதிகாரிகள் பணி செய்யும் நிலை உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

நாகரத்தினம் (அதிமுக) எனது வாா்டில் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவில்லை. பாலசுப்ரமணியன் நகரில் சாலை இல்லாமல் மழைநீா் தேங்கி நிற்கிறது எனக் கூறி, வெளிநடப்பு செய்தாா்.

தலைவா் (பொறுப்பு): நகா் மன்ற உறுப்பினா்கள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளையும் அதிகாரிகள் நிவா்த்தி செய்ய முன்வர வேண்டும். குறிப்பாக குடிநீா், தெரு விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய், பன்றி, மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com