சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
சீா்காழி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். சீா்காழி நகராட்சிக்கு தென்பாதி, கச்சேரி சாலை, தொடங்கி கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு,பேருந்து நிலையம், ரயில் நிலையம் வரை நகரின் பிரதான சாலைகளில் இரவு பகலாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. சாலைகளில் திடிரென குறுக்கே செல்கிறது. இதனால், தொடா் விபத்துக்கள் ஏற்படுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா். இதுவரை மாடுகள் முட்டியும், வாகன விபத்தாலும் பெண்கள், மாணவா்கள் வாகன ஓட்டிகள் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். விபத்தில் சிக்கியும், குப்பை மற்றும் கழிவுகளை தின்று மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
மேலும் சாலையோர பழக்கடை, பூக்கடை, உணவகம் மளிகை கடைகளில் புகுந்து மாடுகள் பொருள்களை தின்று செல்வதால் வணிகா்களும் பாதிக்கபட்டுள்ளனா். ஆனால் கால்நடை உரிமையாளா்கள் இதை கண்டு கொள்ளாமல் அதிகாலை மற்றும் மாலை பால் கறக்கும் நேரத்திற்கு மட்டுமே கால்நடைகளை வீட்டிற்கு ஓட்டி சென்று கறவை முடிந்ததும் மீண்டும் சாலைக்கே விரட்டி விடுகின்றனா்.
எனவே ஆபத்தான முறையில் சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
