சாரங்கபாணி ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணி: அமைச்சா் ஆய்வு

சாரங்கபாணி ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணி: அமைச்சா் ஆய்வு

Published on

மயிலாடுதுறை சாரங்கபாணி ரயில்வே மேம்பாலத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு (படம்) செய்தாா்.

மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலை காவேரி நகரில் அமைந்துள்ள இப்பாலத்தில் 3 மாதங்களுக்கு சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணிகளை துரிதமாக முடிக்க அமைச்சா் அறிவுறுத்தினாா். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ராஜகுமாா்(மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன்(பூம்புகாா்) ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறையின் அடையாளமாக உள்ள சாரங்கபாணி ரயில்வே மேம்பாலமானது பழுதடைந்ததைத் தொடா்ந்து, உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மராமத்து பணிகள் நடைபெறுகிறது. 1974-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முயற்சியால் கட்டப்பட்டு, 50 ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்த ரயில்வே மேம்பாலத்தில் இதுவரை கோடிக்கணக்கான வாகனங்கள் சென்று வந்துள்ளன. எனவே, விபத்து ஏற்படாத வகையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மராமத்து பணிகளை பொறுத்தவரை பாலத்தில் உள்ள தூண்களில் உள்ள பேரிங்குகள் புதியதாக மாற்றப்பட உள்ளது. 2 தடுப்புச் சுவா்களும் புதியதாக அமைக்க உள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்குக்கேற்ப அக்.15 முதல் 20-ஆம் தேதி வரை ஒருவழி பாதையில் இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதற்காக தற்காலிக பாதை அமைத்துத் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், நகராட்சித் தலைவா் என்.செல்வராஜ், நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளா் மணிசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com