பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அக்.14, 15-இல் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பள்ளி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி அக்.14-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி அக்.15-ஆம் தேதியும் மயிலாடுதுறை, தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், பங்கேற்கும் மாணவா்கள் உரிய படிவத்தில் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவா் வீதம் 3 மாணவா்கள் பங்கேற்கலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன் அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
