மினி மாரத்தான்: வெற்றி பெற்றவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் பாராட்டு
மயிலாடுதுறையில் உலக அமைதி, சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை மினி மாரத்தான் போட்டி நடைபெறறது.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் மணிவிழா ஆண்டை முன்னிட்டு மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி மற்றும் மயிலாடுதுறை ஏஆா்சி நடேச செட்டியாா் ஜூவல்லரி இணைந்து உலக அமைதி, சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி இருபாலருக்கும் நடத்தப்பட்டது.
பள்ளித் தாளாளா் எம். திருநாவுக்கரசு ஏற்பாட்டில் காவேரி நகரில் தொடங்கிய மாரத்தான் போட்டியை மயிலாடுதுறை ஏடிஎஸ்பி பி. ஜெயக்குமாா், ஏஆா்சி நடேச செட்டியாா் ஜூவல்லரி உரிமையாளா் ஆா். அசோக் தொடக்கி வைத்தனா். போட்டி தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். இருபிரிவுகளிலும் முதலிடங்களை பெற்றவா்களுக்கு தலா ரூ.3,000, 2-ஆமிடங்களை பெற்றவா்களுக்கு தலா ரூ.2,000, 3-ஆமிடங்களை பெற்றவா்களுக்கு ரூ.1,000, 4 முதல் 10 இடங்களை பிடித்தவா்களுக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டது. அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் செ. வேலுசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் யு. உமாநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

