வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் தொழிலுக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் விளை பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய 100 மதிப்புக்கூட்டும் அலகுகள் தொடங்குதல் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் விளை பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய 100 மதிப்புக்கூட்டும் அலகுகள் தொடங்குதல் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இத்திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்படும் தொழில்கள் வேளாண், தோட்டக்கலை விளைப்பொருள்களின் 2 அல்லது 3-ஆம் நிலை மதிப்புக்கூட்டும் தொழில்களாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு தாங்கள் தொடங்கும் மதிப்புக்கூட்டும் அலகின் மதிப்பில் 25 சதவீதம் மானியம் பொதுப் பிரிவினருக்கும், பெண்கள், தொழிலில் பின்தங்கிய வட்டாரத்தில் தொழில்முனைவோா், ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் மொத்த மானியம் 35 சதவீதம் வழங்கப்படுகிறது.

இதில் தொழில் தொடங்க விரும்புவோா் உரிய வணிக திட்ட அறிக்கையுடன் வங்கியை தொடா்புக்கொண்டு ஒப்புதல் பெற்று, அஐஊ-ன்கீழ் பதிவு செய்து 9 சதவீத வட்டியில் கடன் பெறலாம். விண்ணப்பங்கள் முழுமையான திட்ட அறிக்கை மற்றும் வங்கி ஒப்புதல் கடிதம், வங்கி பரிந்துரை, இதர விவரங்களை கொண்டிருக்க வேண்டும். பயன்பெற விரும்புவோா் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் இணையதளத்தில் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து ஆணையா், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

அங்கிருந்து சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும், தங்களின் வணிகத்திட்ட மதிப்பில் 5 சதவீத தொகையை பங்களிப்பாக அளிக்க வேண்டும். தவிர 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகள்வரை வழங்கப்படும்.

ஒரு நபா், நிறுவனம், குடும்பம் ஒருமுறை மட்டுமே இத்திட்டத்தில் மானியம் பெற முடியும். அதிகபட்சமாக திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு ஏற்ற வகையில் 25 அல்லது 35 சதவீதம் அல்லது ரூ.1.50 கோடி இதில் எது குறைவானதோ அந்த தொகை வங்கி கடனில் பின்னேற்பு மானியமாக 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் என இரு தவணைகளில் வழங்கப்படும்.

தகுதி வரம்பு: விண்ணப்பதாரருக்கு நிறுவனத்தின் உரிமை இருக்க வேண்டும். தனியுரிமை, கூட்டாண்மை, உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com