‘நிறைந்தது மனம்‘ நிகழ்ச்சி வாயிலாக மாவட்ட ஆட்சியா் சந்திப்பு
மயிலாடுதுறை அருகே குளிச்சாரில் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைபடுத்துதல் திட்டப் பயனாளியை ‘நிறைந்தது மனம்‘ நிகழ்ச்சி வாயிலாக மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். (படம்).
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவனம் (சிட்கோ) தொழிற்பேட்டை குளிச்சாா் கிராமத்தில் இயங்கிவருகிறது. இங்கு, 61 தொழில் மனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைபடுத்துதல் திட்டத்தின்கீழ், பொன்னுசாமி என்பவா் ரூ. 40 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி பெற்று, மசாலா பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைத்துள்ளாா்.
இந்நிறுவனத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பாா்வையிட்டு, தொழிற்சாலையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்கள் உற்பத்தி விவரங்கள், முதலீடுகள், வருவாய் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தாா்.
பின்னா், பயனாளி பொன்னுசாமி கூறியது: நான் தொழில் தொடங்க திட்டமிடப்பட்டபோது, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வழங்கப்படும் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி குறித்து நண்பா்கள் மூலம் அறிந்தேன். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, மாவட்ட தொழில் மையத்தின் வழியாக பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைபடுத்துதல் திட்டத்தின்கீழ், ரூ. 40 லட்சம் கடனுதவி பெற்றேன். இதில் ரூ. 3.50 லட்சம் அரசு மானியம் கிடைத்தது. இத்திட்டத்தை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என்றாா்.

