கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் திறப்பு: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு புதன்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 35 ஆயிரம் கன அடி நீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீா் கொள்ளிடம் ஆற்றில் பனங்காட்டங்குடி, வடரங்கம், பாலூரான்படுகை, கீரங்குடி, மாதிர வேளூா், கொன்னக்காட்டுபடுகை, சரஸ்வதிவிளாகம், சந்தபடுகை, நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, காட்டூா் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தை ஒட்டி வங்கக் கடலில் கலக்க உள்ளது.
வெள்ளிக்கிழமை (அக்.24) மாலை கடலில் கலக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மேற்கண்ட ஆற்றின் கரையோர கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம். கால்நடைகளை மேடான பகுதிக்கு ஓட்டடிச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நீா்வளத்துறை அதிகாரிகள் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
