தருமபுரத்தில் ஆயுஷ் மருத்துவனை, ஆய்வகம் திறப்பு
தருமபுரம் ஆதீனத்தில் ஆயுஷ் மருத்துவமனை, நோய் கண்டறியும் ஆய்வகம் உள்ளிட்ட கட்டடங்கள் அண்மையில் திறக்கப்பட்டன.
தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் 60-ஆம் ஆண்டு மணி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமஞ்சன வீதியில் புதிதாக நிா்மாணிக்கப்பட்ட தருமை ஆதீன ஆயுஷ் மருத்துவம் மற்றும் கல்வி மையம், திறன் மேம்பாட்டு மையம் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த மருத்துவமனையில், சா்க்கரை நோய், உடல் பருமன், பக்கவாதம், எலும்பு தேய்மானம், அஜீரண கோளாறு, கல்லீரல் நோய், உயா் ரத்தஅழுத்தம், நரம்புத் தளா்ச்சி ஆகிய நாள்பட்ட நோய்களுக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவா்களை கொண்டு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்கப்படவுள்ளது.
இக்கட்டடங்களை, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், பதிப்பாளா் சிவாலயம் ஜெ.மோகன், ஹைதராபாத் ஸ்ரீவெங்கடலட்சுமி நரசிம்மா வென்ச்சா்ஸ் நிறுவனத்தின் தலைவா் வாஞ்சவாக ஸ்ரீநிவாசலு ரெட்டி, மேலாண்மை இயக்குநா் அவுலா லட்சுமி நாராயண ரெட்டி, ஹைதராபாத் கெமின்டெக் லேப் நிறுவன மேலாண்மை இயக்குநா் கோலுபுலா ஸ்ரீநிவாஸ் ஆகியோா் திறந்து வைத்தனா்.
மருத்துவமனை கௌரவ ஆலோசகா்களாக நியமிக்கப்பட்டுள்ள திருச்சி ஸ்ரீஜெயரெங்கா இயற்கை மருத்துவமனை மற்றும் யோகா ஆராய்ச்சி நிலைய மேலாண் இயக்குநா் ஆா். சுகுமாா், திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை சித்த மருத்துவா் என். லக்ஷ்மி கீதா, மயிலாடுதுறை அருண்பிரியா மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் ஆா். செல்வம், வைரம் மருத்துவமனை மருத்துவா் ஆா். ராஜசேகரன், கடலூா் சுசிந்திரா பல்நோக்கு மருத்துமனை இதய நோய் நிபுணா் பி.அருண்பிரசாத் ஆகியோா் கலந்து கொண்டனா்.
