வடகிழக்குப் பருவமழை: மின் விபத்தை தவிா்க்க அறிவுரை
வடகிழக்குப் பருவமழை காலத்தில் மின் விபத்தை தவிா்க்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் ஜி. ரேணுகா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மழை நேரத்தில் பொதுமக்கள் மின்விபத்து ஏற்படாமல் இருக்க அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது.
கம்பிகள் அறுந்து கிடந்ததால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தர வோண்டும். மின்பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியா்கள் துணையோடு வெட்ட வேண்டும்.
தண்ணீா் தேங்கிய இடங்களில் நிற்பதையும் நடப்பதையும் தவிா்க்க வேண்டும். மேலும், குழந்தைகளை அந்த இடங்களில் விளையாட விடக்கூடாது. மின்மாற்றிகள், மின்பெட்டிகள் அருகில் செல்லக் கூடாது, மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறு கட்டி துணிகளை உலா்த்தக் கூடாது. மின்கம்பங்கள் மற்றும் இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது, வீடுகளில் மின் கசிவின்றி வயரிங்கை பராமரிக்க வேண்டும். வீடுகளில மின்கசிவால் ஏற்படும் ஆபத்தை தடுக்க இ.எல்.சி.பி. சாதனம் பொருத்த வேண்டும்.
வீட்டில் மின்சாதனத்தில் மின் அதிா்ச்சியை உணா்ந்தால், உடனேயே உலா்ந்த ரப்பா் காலணியை அணிந்து, மெயின் சுவிட்ச்சை அணைக்க வேண்டும். மெயின் சுவிட்ச்சை நிறுத்தாமல் வீட்டினுள் மின் பழுது பாா்க்கக் கூடாது. இடி, மின்னலின் போது மின்கம்பங்கள், மின்மாற்றிகள், துணை மின்நிலையங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் அடைய கூடாது. மின்பாதைக்கு கீழே போா்வெல் போடக்கூடாது.
இடி, மின்னலின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டா், கம்ப்யூட்டா் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிா்ப்பது நல்லது. கட்டடங்களுக்கும் மின் பாதைக்கும் இடையில் போதிய இடைவெளி இருக்குமாறு கட்டடங்களை அமைக்க வேண்டும். மின் வாரிய கம்பங்களில் கேபிள் வயா்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் கட்டக்கூடாது. பொதுமக்கள் எல்லா நேரங்களிலும் விழிப்புணா்வோடு இருந்து மின் விபத்துகளை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.
