கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம்: ஹெச்.ராஜா பேட்டி
தமிழகம் கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற பாஜக நிா்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சா் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதுதான் காரணம் என்கிறாா்.
நெல் விதை விடும்போது பரப்பளவு குறித்து தெரிந்திருக்க வேண்டும். அறுவடை செய்வதற்கு 110 நாட்களாகும் அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு என்ன செய்ததுய
கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் கொள்முதல் செய்த நெல்லை பாதுகாக்க தற்காலிக கிடங்குகள் கூட அமைக்க முடியவில்லை. வரும் 2026 தோ்தலில் மக்களே உங்களை அடித்து விரட்டுவாா்கள்.
அறுவடை செய்த நெல்லை வைக்க விவசாயிக்கு இடமில்லை. கொள்முதல் செய்த நெல்லோ முளைத்துவிட்டது. நெல்லுக்கான தொகை கொடுப்பது இந்திய உணவு கழகம். கொள்முதல் செய்த நெல் மூட்டைகளைப் பாதுகாக்க போதிய வசதிகள் இல்லை. அதை மறைக்க மத்திய அரசு மீது பழிபோடுகிறாா்கள். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
பிற மாநிலங்கள் முதலீடுகளை அதிகமாக ஈா்க்கின்றன. தமிழகத்தில் பாக்ஸ்கான் ரூ.15,000 கோடி முதலீடு செய்துள்ளதாக திமுக அரசு கூறுகிறது. ஆனால் அப்படி ஒப்பந்தமே செய்யவில்லை என அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
வருவாய் ஈட்டுவதில் முதலிடத்தில் உத்தர பிரதேசம் உள்ளது. தமிழகம் கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது. நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்த எதிா்க்கட்சித் தலைவா் வெள்ளையறிக்கை கேட்கிறாா்.
கரூா் சம்பவத்திற்கு முழுக்க, முழுக்க தமிழக அரசே காரணம். காவல்துறை அனுமதி வழங்கிய இடத்தில்தான் விஜய் கூட்டத்தை நடத்தியுள்ளாா். குறிப்பாக சம்பவம் குறித்து முதலமைச்சா் பேரவையில் பேசும்போதே பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளாா்.
மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விஜய் இரவு 7.30 மணிக்கு வந்துள்ளாா். ஆனால் உரிய முன்னேற்பாடுகளை செய்ய தவறியது அரசுதான்.
முன்னதாக வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்மன், வைத்தியநாதா், தன்வந்திரி, அங்காரகன் சந்நிதிகளில் சாமி தரிசனம் செய்தாா்.

