Enable Javscript for better performance
திருச்சபையின் உரிமைகளை பறிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்\\\',- Dinamani

சுடச்சுட

    

    திருச்சபையின் உரிமைகளை பறிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்',

    By பொறையாறு  |   Published on : 26th January 2013 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார் லுத்தரன் முன்னேற்ற இயக்க முதன்மை பொதுச் செயலர் இ.டி. சார்லஸ்.

    நாகை மாவட்டம், பொறையாறில் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்களின் ஒருநாள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் இ.டி. சார்லஸ் மேலும் கூறியது:

    திருச்சபையில் சபை குருமார்களுக்கு வாக்குரிமை கிடையாது; ஊதியம் கிடையாது; திருச்சபை ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் அடங்கிய ஆணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.

    இது திருச்சபையின் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. இதை முதல்வர் மறுபரிசீலனை செய்து, திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து முதல்வருடனான சந்திப்பின்போது கோரிக்கை விடுக்கப்படும்.

    நிகழாண்டில் தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எந்த நடைமுறையில் நடத்துவது என்பது குறித்து தமிழக அரசையும், நீதிமன்றத்தையும் அணுக உள்ளோம்.

    கிறிஸ்தவர்களின் உரிமைகளை முன்னெடுத்து செல்லும் வகையிலும், அரசியல் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்காலத்தில் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் ஒரு தேசிய அரசியல் கட்சியாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து தேசிய அளவில் கிறிஸ்தவ திருச்சபையினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் மீது தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் பெரிய அளவில் கவன ஈர்ப்பு பேரணி நடத்துவது, ஆயர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவது, கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளின் உரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

    100 சபை குருமார்கள், 600-க்கும் மேற்பட்ட சபைத் தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai