சுடச்சுட

    

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்கார தேர் பவனி: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

    Published on : 08th September 2013 01:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்கார தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

    கீழைநாடுகளின் லூர்து எனப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்தப் பேராலயத்தின்  ஆண்டுப் பெருவிழா ஆக. 29-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான அலங்காரத் தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக,  தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, சிறப்புக் கூட்டுத் திருப்பலி ஆகியன நிறைவேற்றப்பட்டன.

    சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், சனிக்கிழமை இரவு திருத்தேர் பவனி தொடங்கப்பட்டது.

    குழந்தை இயேசுவுடன் புனித ஆரோக்கிய அன்னை காட்சியளிக்கும் திருவுருவம் தாங்கிய அலங்காரத் திருத்தேர் பிரதான தேராக பவனியில் இடம் பெற்றது.

    மிக்கேல் சம்மனசு, புனித அந்தோனியார், சூசையப்பர், உத்திரியமாதா, செபஸ்தியார் ஆகியோரின் திருவுருவம் தாங்கிய சப்பரங்கள் தேர் பவனியில் அணிவகுத்தன.

    பேராலய முகப்பிலிருந்து தொடங்கிய திருத்தேர் பவனி, கடற்கரைச் சாலை, ஆர்யநாட்டுத் தெரு, கடைவீதி வழியே ஊர்வலமாகச் சென்று, பேராலய முகப்பில் நிறைவடைந்தது.

    பேராலய அதிபர் ஏ. மைக்கில் மற்றும் பங்குத் தந்தையர்கள், உதவிப் பங்குத் தந்தைகள் சிறப்பு வழிபாடுகளை முன்னின்று மேற்கொண்டனர்.

    வெளிநாடுகள் மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோரும் கலந்து கொண்டனர். திரளானோர் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி வந்திருந்து, திருத்தேர் பவனியில் பங்கேற்றனர்.

    நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபிசக்ரவர்த்தி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராலய நிர்வாகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள், குடிநீர் விநியோகம் உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    அன்னையின் பிறந்த நாள்

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அன்னையின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை (செப். 8) நடைபெறுகிறது.

    தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai