சுடச்சுட

    

    நாகை மாவட்ட திமுக தேர்தல் நிதி ரூ. 1.60 கோடி

    By  நாகப்பட்டினம்,  |   Published on : 09th September 2013 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்ட தேர்தல் நிதியாக ரூ. 1.60 கோடி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
     நாகை மாவட்ட திமுக சார்பில், நாகை அவுரித் திடலில் நாகை மக்களவைத் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
     இதில் மு.க. ஸ்டாலின் பேசியது:
     திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் ஏற்கெனவே ரூ. 1.10 கோடி முதல் தவணை வழங்கப்பட்டுள்ளது.
     நாகை மாவட்ட திமுக சார்பில் அண்மையில் ரூ. 50 லட்சமும், தற்போது ரூ. 1.10 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்தையும், மீன்பிடிப்பையும் அடிப்படையாகக் கொண்ட நாகை மாவட்டத்தில், விவசாயிகளும், மீனவர்களும் தொழில் பாதிப்புக்குள்ளாகி அவதிக்குள்ளாகியுள்ளதே நிதி குறைவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
     விவசாயம், மீன்பிடிப்பு உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், முதல் தவணையாக ரூ. 1.60 கோடி நிதி அளித்துள்ள நாகை மாவட்ட திமுக செயலாளர் ஏ.கே. எஸ். விஜயனுக்கும், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி.
     வரும் மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். வரும் மக்களவைத் தேர்தல், மாநில ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் இல்லை. ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தத் தேர்தலைக் கருதி திமுகவின் வெற்றிக்குத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
     4-வது முறையாக நாகை மக்களவைத் தொகுதி வெற்றியைத் தக்கவைப்போம். 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்ற உறுதியுடன் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றார் ஸ்டாலின்.
     நாகை மாவட்ட திமுக செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன், திமுக மக்களவைத் தேர்தல் நிதியாக ரூ. 1.60 கோடிக்கான காசோலையை (மாதிரி), திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்.
     மாவட்ட திமுக செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் உ. மதிவாணன், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன், முன்னாள் அமைச்சர் அழகு. திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     மக்களவை உறுப்பினர் இ.ஜி. சுகவனம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.ஆர்.பி. ராஜா (மன்னார்குடி), ஏ.எம்.எச். நாஜிம் (காரைக்கால்), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெக. வீரபாண்டியன், க. அன்பழகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
     திருவாரூரில்...: முன்னதாக திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் அவர் பேசியது:
     கடந்த பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நாட்டுக்காக, மக்களுக்காக சிந்தித்துக் கொண்டிருப்பவர் கருணாநிதி. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். இந்த வெற்றி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முன்னுதாரணமாக அமையும் வகையில் திமுகவினர் பாடுபட வேண்டும் என்றார் ஸ்டாலின்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai