சுடச்சுட

    

    இந்தியா- இலங்கை கடல் பரப்பில் 2 நாட்டு மீனவர்களுக்கும் தலா 5 மாதம் மீன்பிடி உரிமை வழங்கக் கோரிக்கை  

    By  நாகப்பட்டினம்  |   Published on : 10th September 2013 10:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியா- இலங்கைக் கடல் பரப்பில் 2 நாட்டு மீனவர்களும் தலா 5 மாதங்கள் மீன்பிடித்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
     இது குறித்து, நாகை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் செயலாளரும், தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் மாவட்டத் தலைவருமான ஆர்.எம்.பி. ராஜேந்திர நாட்டார், பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் :
     1974-ம் ஆண்டுக்கு முன்னர் கடல் எல்லை வரையறை இல்லாத காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 2 நாட்டு மீனவர்களும் நட்புடன் தொழில் செய்து, உறவுக்குரியவர்களாக விளங்கினர். 1984-ம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கையில் இனப் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூரத் தாக்குதல் நடத்தும் போக்குத் தொடர்கிறது.
     இலங்கை இனப் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை இலங்கைக் கடற்படையினர் கைவிடவில்லை. ஒரு நாட்டின் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் தொலைவு அந்த நாட்டினரின் உரிமைக்குரியது என்ற நிலையிலும், இலங்கைக் கடற்படை வரம்பு மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
     நாகை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர்கள் ஜூலை 29-ம் தேதி இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகி நாகையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜூலை 30-ம் தேதி நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 65 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையிலடைத்துள்ளது.
     இந்தியா- இலங்கை நட்பு நாடுகள் எனக் கூறப்படும் நிலையில், நட்புக்கான எந்த வரையறையையும் கடைபிடிக்காத இலங்கையின் நட்புக்காக, இந்திய மீனவர்களை அரசு பறிகொடுக்கும் நிலை இனியும் தொடரக் கூடாது.
     இது குறித்து மத்திய அரசு விரைவான பரிசீலினை மேற்கொண்டு, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும், அவர்களின் படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
     மேலும், கச்சத்தீவு ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்தி ஓய்வெடுக்கும் உரிமை மற்றும் அந்தோனியார் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் உரிமையை அரசு உறுதி செய்ய வேண்டும்.
     இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் வகையில், 2 நாட்டு மீனவர்களும் தலா 5 மாதங்கள் இரு நாட்டு கடல் பரப்பிலும் பரஸ்பரம் மீன்பிடித்துக் கொள்ளலாம் என்ற உரிமையைப் பெற்றுத் தர வேண்டும்.
     இந்திய எல்லைக்குள் நுழையும் இலங்கை மீனவர்களையும், இலங்கை எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களையும் 2 நாட்டு கடற்படைகளும் கைது செய்வதில்லை என்ற உறுதியான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இந்திய மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai