சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், நாகையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நிறைவடைந்தது.

    ஊதியக்குழு வரையறுத்த அடிப்படை ஊதியத்தை வழங்க வேண்டும். தகுதியான ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை அரசு ஊழியர் சங்க அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சி. கதிர்வேலு, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன், வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர் எம். ஜெயபால் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    இந்தப் போராட்டம் வியாழக்கிழமை காலை 10 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சங்கத்தின் மாநிலக் குழு முடிவுப்படி, புதன்கிழமை மாலையுடன் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது. சிஐடியு மாவட்டத் தலைவர் சீனி. மணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.

    திருவாரூர்:  காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள் 2-வது நாளாக புதன்கிழமையும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர்.

    முன்னதாக, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் 48 மணி நேர உண்ணாவிரதத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். உண்ணாவிரதத்தில், சங்க மாவட்டத் தலைவர் மனோகரன், செயலர் சந்திரசேகரன், பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai