சுடச்சுட

  

  நாகை மாவட்டம், பூம்புகாரில் ரூ. 78.5 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.

  தமிழக கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட புராதன நகரமாக விளங்குவது பூம்புகார். சங்க இலக்கியமான சிலப்பதிகார நாயகன் கோவலன், நாயகி கண்ணகி ஆகியோர் வாழ்ந்த (காவேரிப்பூம்பட்டினம்) பூம்புகார், தொல்லியல் துறையின் ஆராய்ச்சிக்குப் பல்வேறு சுவடுகளை அளித்துள்ளது.

  கடற்கரை சார்ந்த இப்பகுதியின் பிரதான தொழிலாக விளங்குவது மீன்பிடித் தொழில்.

  கடல் அலை சுழற்சியின் காரணமாக மீன்பிடி விசைப் படகுகளை பூம்புகார் கடற்கரைக்கு அருகில் கொண்டுவர இயலாத நிலை இப்பகுதியில் உள்ளது. 

  இதனால், விசைப்படகு மூலமான மீன்பிடிப்புக்குச் செல்வோர், டீசல், ஐஸ் கட்டி, மீன்பிடி வலை உள்ளிட்டவற்றை கடற்கரையிலிருந்து பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் கொண்டுச் சென்று, விசைப் படகுக்கு மாற்ற வேண்டிய நிலை உள்ளது.

  மேலும், விசைப் படகு மூலம் அறுவடை செய்யப்படும் மீன்களையும் கடற்கரைக்குக் கொண்டு வருவதற்கு, பைபர் படகுகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

  இந்த நிலையை மாற்ற, மீன்பிடி விசைப் படகுகளை கடற்கரை பகுதிகளுக்குக் கொண்டு வரும் வகையில், பூம்புகாரில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை.

  இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில், பூம்புகாரில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த 1995-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

  அதன்பிறகு, பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்துக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகளும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளும் 2001-ம் ஆண்டில் நடைபெற்றன.

  ஆய்வுகளின் நிறைவில், பூம்புகாரில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க ரூ. 40 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய தொல்பொருள் ஆய்வியல் துறையின் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.

  பிறகு, திட்டம் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, புதிய திட்ட மதிப்பீட்டுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்தார்.

  இதன் தொடர்ச்சியாக, பூம்புகாரில் ரூ. 78.5 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டத்துக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை காலை அடிக்கல் நாட்டினார்.

  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னய்யா, மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளர் எஸ். விஜயகுமார், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் இரா. பழனிசாமி, மீன்வளத் துறை இயக்குநர் ச. முனியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

  பூம்புகாரில்...

  காணொலிக் காட்சி மூலம் பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி, பூம்புகார் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த காணொலிக் காட்சி திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது.

  நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஓ.எஸ். மணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ் (பூம்புகார்), ம. சக்தி (சீர்காழி), மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன், மீன்வளத் துறை துணை இயக்குநர் சுப்புராஜ், செயற்பொறியாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  350 படகுகளை நிறுத்தும் வசதி...

  பூம்புகாரில் அமைக்கப்படவுள்ள மீன்பிடி துறைமுகத்தில், அலைத் தடுப்புச் சுவர், படகு அணையும் சுவர், மீன் ஏலக்கூடம், சாய்வு தளம், சாலை, கான்கிரீட் தளம், மின் வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, தகவல் தொடர்பு உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படவுள்ளன.

  பூம்புகார் மற்றும் அதைச் சுற்றியுள்ள மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் வகையில், 11 மீட்டர் நீளமுள்ள 150 விசைப் படகுகளும், 13 மீட்டர் நீளமுள்ள

  200 விசைப் படகுகளும், 350 நாட்டுப் படகுகளும் நிறுத்தப்படும் வகையிலான கட்டமைப்பு இந்தத் துறைமுகத்தில் ஏற்படுத்தப்படவுள்ளது.

  இந்தத் திட்டம் மூலம், பூம்புகார் மற்றும் அதைச் சுற்றியுள்ள 17 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைவர்.

  பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளதன் மூலம் பூம்புகார் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கைக்குத் தீர்வு கிடைத்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai