சுடச்சுட

    

    இன்டர்நெட் மூலம் காவல்துறைக்கு புகார் அளிக்கும் திட்டம் தொடக்கம்

    By நாகப்பட்டினம்  |   Published on : 17th September 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில் இணைய தளம் மூலம் காவல் துறைக்குப் புகார் அளிக்கும் வலைப் பின்னல் முறை திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

    தேசிய மின்னாளுமைத் திட்டத்தின் கீழ், குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலைப் பின்னல் முறை திட்டம், தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    பொதுமக்களுக்கான காவல் துறைச் சேவைகளை மின்னணு மூலம் அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். காவல் துறைக்குப் புகார் தெரிவிப்பது, உரிமங்களுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்டவற்றுக்கும், பதிவு செய்யப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை குறித்த விவரங்களுக்கும் இந்தத் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ட்ற்ற்ல்:ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணைய தளம் மூலம், மாவட்டத்தின் எந்தக் காவல் நிலையத்துக்கும் புகார் அளிக்கும் வசதி இந்தத் திட்டத்தில் உள்ளது. மேலும், புதிய வாகனங்கள் வாங்கும்போது அந்த வாகனத்தின் மீது ஏதேனும் காவல் துறை வழக்குப் பதிவு உள்ளதா என்பது குறித்தும் இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    முன்னோடி நிலையாக, திருவள்ளூர், அரியலூர், சிவகங்கை, கோவை ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், முதல் நிலை விரிவாக்கத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

    இதற்கான நிகழ்ச்சி நாகை நகரக் காவல் நிலையத்தில் நடைபெற்றது. நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபிச்சக்ரவர்த்தி, திட்டத்தைத் தொடக்கி வைக்கும் விதமாக இணையம் மூலம் வழக்குப் பதியும் பணியைத் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்தது :

    நாகை மாவட்டத்தில் 32 காவல் நிலையங்கள் இந்த வலைப் பின்னல் முறை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டு வழக்கு விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. ஒரு காவல் நிலையத்துக்கு 3 காவலர்கள் வீதம், உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்குக் கணினி மூலம் ஏற்பளிப்புச் சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

    நாகை காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், காவல் ஆய்வாளர் (தனிப் பிரிவு) தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai