வாகன சோதனையின்போது எஸ்.ஐ. மீதுஆட்டோவை மோதிய 2 பேர் கைது
By மயிலாடுதுறை | Published on : 18th September 2013 04:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மயிலாடுதுறையில் வாகன பரிசோதனையின்போது, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஆட்டோவை மோதிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நெப்போலியன் (33), திங்கள்கிழமை மயிலாடுதுறை ஸ்டேட் பாங்க் சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை அருகே வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு நெப்போலியன் சமிக்ஞை செய்தாராம். ஆனால், அவர் மீது மோதிவிட்டு ஆட்டோ நிற்காமல் சென்றுவிட்டது.
பின்னர், ஆட்டோவை பின்தொடர்ந்து சென்ற போலீஸார் திருவிழந்தூர் அருகே ஆட்டோவை மடக்கியபோது, அப்போதும் ஆட்டோ போலீஸார் மீது மோதியதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஆட்டோவை உதவி ஆய்வாளர் நெப்போலியன் பிடித்தார். ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஆட்டோவை ஓட்டியவர் மயிலாடுதுறை வட்டம், நீடுரைச் சேர்ந்த சகாபுதீன் மகன் புகாரி (28) என்பதும், ஆட்டோவில் அமர்ந்திருந்தவர் நீடூர், பொதுமனைத் தெருவைச் சேர்ந்த ஜமாலுதீன் மகன் ஆசிக் அலி (29) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்களிருவரும் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து எஸ்.ஐ. நெப்போலியன் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து புகாரி, ஆசிக் அலி ஆகிய இருவரையும் கைது செய்தனர். சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ஐ. நெப்போலியன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.