சுடச்சுட

    

    மீனவர்களை விடுவிக்கக் கோரி  நாகையில் மீன்பிடி விசைப் படகுகளில்  கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

    By  நாகப்பட்டினம்,  |   Published on : 19th September 2013 10:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மீனவர்களை விடுவிக்கக் கோரி, நாகை படகுத் துறையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி விசைப் படகுகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலிருந்து 9 விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 65 பேர், கடந்த ஜூலை 30-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
     இதில், பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 34 மீனவர்களை விடுதலை செய்து கடந்த 4-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அவர்களின் விசைப் படகுகள் விடுவிக்கப்படாததால், 34 மீனவர்களும் இந்திய தூதரகத்தின் உதவியுடன் இலங்கையில் தங்கியுள்ளனர்.
     இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 65 பேரையும், அவர்களின் படகுகளுடன் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுப்படி, கடந்த 6-ம் தேதி முதல், நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
     இந்த நிலையில், நாகை அக்கரைப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தார் மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 65 பேரையும், அவர்களின் விசைப் படகுகளுடன் இலங்கை அரசு விடுவிக்கக் கோரி, மீன்பிடி விசைப் படகுகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் சிறைப்பிடிப்பு நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில், நாகை படகுத் துறையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி விசைப் படகுகளில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai