சுடச்சுட

    

    தாய்மொழித் தமிழைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதை முதன்மைக் கடமைகளுள் ஒன்றாக ஏற்க வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

    நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்கத்தில் அவர் பேசியது :

    ஒரு நாட்டு மக்களின் அடையாளமாகவும், அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாகவும் இருப்பது மொழி மட்டுமே. 

    மூத்தக் குடிகளின் முதன்மொழியாக விளங்கும் நம் தாய்மொழியான தமிழைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் சமுதாயக் கடமை.

    இதனடிப்படையில், அரசுத் துறை அலுவலகங்களில் தயாரிக்கப்படும் கோப்புகள், கடிதங்களை தமிழில் எழுத வேண்டியது அவசியம்.

    நம் தாய்மொழியின் செழுமையை வருங்காலச் சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் கடமையை அரசுத் துறை அலுவலர்கள், தங்கள் பணி மூலம் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆட்சிமொழிப் பயிலரங்கங்கள் நடத்தப்படுகின்றன.

     இக் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் அனைவரும் ஆட்சிமொழியான தமிழுக்கு உரிய உயரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியதைக் கடமையாக ஏற்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

    தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு. சேகர் பேசுகையில், கடல் கடந்து பல வெளிநாடுகளில் ஆட்சிமொழியாகத் திகழும் தமிழ், இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் இடம்பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் 2  இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    முதலிடம் பெற்றவர்களுக்குத் தலா ரூ. 10 ஆயிரம் வீதமும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்குத் தலா ரூ. 7 ஆயிரம் வீதமும் பரிசுக் காசோலைகள் வழங்கப்பட்டன.

    2011-ல் தமிழ்மொழி வாயிலாக சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசுத் துறை அலுவலர்கள், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டனர்.

    அதன்படி மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் க. சித்ரா,

     நாகை நகராட்சி அலுவலக உதவியாளர் க. சசிகலா ஆகியோருக்குத் தலா ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம், கூத்தாநல்லூர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் நாகை நாகராசன், தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் மு. ஞானசேகர் ஆகியோர் பேசினர்.

    தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் கா. அருண் ரசீத் வரவேற்றார். செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் அ. செந்தில் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai