சுடச்சுட

    

    விடுதலையான சீர்காழி மீனவர் வீடு திரும்பினார்

    By நாகப்பட்டினம்  |   Published on : 20th September 2013 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடல் எல்லை தாண்டிய குற்றத்துக்காக ஈரானில் சுமார் 9 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து, செப். 16-ம் தேதி சிறைமீண்ட சீர்காழி மீனவர் ஏ. விமல்ராஜ் வியாழக்கிழமை வீடு திரும்பினார்.

    சீர்காழி வட்டத்துக்குள்பட்ட பழையாறு புதுநகரைச் சேர்ந்தவர் ஏ. விமல்ராஜ் (38). இவருக்கு மனைவி வாசுகி, வசுந்தரா, அதிபன் என்ற 2 குழந்தைகள் உள்ளன. மீன்பிடித் தொழிலாளரான விமல்ராஜ், கடந்த 2011-ம் ஆண்டு செüதி அரேபியாவுக்குச் சென்று, அங்குள்ள தனியார் மீன்பிடி நிறுவனத்தில் மீன்பிடித் தொழிலாளாரகப் பணியாற்றினார்.

    இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி விமல்ராஜ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் உள்பட 22 மீனவர்கள், சவூதி அரேபியா கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, தவறுதலாக ஈரான் கடல் எல்லைப் பகுதிக்குள் சென்றனர். அப்போது, அவர்கள் 22 பேரையும் ஈரான் கடற்படையினர் கைது செய்து, சிறையிலடைத்தனர். 

    இதைத் தொடர்ந்து, ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரையும் விரைவாக ஈரான் சிறையிலிருந்து மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.

    இதனிடையே ஈரானில் சிறைப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார். இந்த உதவித் தொகை, ஆக. 1-ம் தேதி மாநில மீன்வளத் துறை அமைச்சர் மூலம், 16 மீனவர்களின் குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது.

    தமிழக அரசின் தொடர் வற்புறுத்தல், மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, ஈரானில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை ஈரான் அரசு கடந்த 16-ம் தேதி விடுதலை செய்தது.

    ஈரானிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் செப். 17-ம் தேதி மும்பை வந்த தமிழக மீனவர்கள் 16 பேரையும், மாநில மீன்வளத் துறை அமைச்சர் வரவேற்று சென்னை அழைத்து வந்தார்.

    சிறை மீண்ட மீனவர்கள் செப். 18-ம் தேதி சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பொருளீட்ட அயல்நாடு சென்று, சிறைவாசத்துக்குள்ளான மீனவர்களின் நிலை கருதி, அவர்களுக்குத் தலா ரூபாய் ஒரு லட்சம் உதவித் தொகை வழங்கினார் முதல்வர்.

    மேலும், 16 மீனவர்களும் மீன்பிடி படகு வாங்கி தமிழகத்தில் தொழில் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தலா ரூ. 30 லட்சம் அரசு மானியமாகவும், ரூ. 30 லட்சம் வங்கிக் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

    முதல்வரிடம் ஆறுதல், உதவித் தொகை பெற்ற பழையாறு மீனவர் விமல்ராஜ், அரசு செலவில் வியாழக்கிழமை காலை நாகை மாவட்டம், பழையாறில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

    அப்போது விமல்ராஜின் குடும்பத்தினர் கண்ணீருடன் அவரை வரவேற்றனர். அப்பகுதியைச் சேர்ந்த உறவினர்களும் திரளாக வந்திருந்தனர்.

    ஆட்சியர் ஆறுதல்: நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, சீர்காழி தொகுதி எம்எல்ஏ ம. சக்தி, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் எஸ். ஜெயராமன், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீனா, மீன்வளத் துறை உதவி இயக்குநர் நாபிராஜ் உள்ளிட்டோர் மீனவர் விமல்ராஜை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    முதல்வருக்கு நன்றி: தமிழக முதல்வர் எங்களுக்குப் பரிவு காட்டி, தொடர் முயற்சி மேற்கொண்டதால்தான் நாங்கள் ஈரானிலிருந்து சிறை மீள முடிந்தது. தற்போது எங்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் வகையில், புதிய படகு வாங்க மானியம், கடனுதவிக்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டுள்ளார். முதல்வர் எங்கள் மீது காட்டிய கனிவுக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம் என்றார் விமல்ராஜ்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai