Enable Javscript for better performance
\\\"வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு இணையதள மையங்களைப் பயன்படுத்தலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு இணையதள மையங்களைப் பயன்படுத்தலாம்'

    By நாகப்பட்டினம்  |   Published on : 22nd September 2013 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட இணையதள மையங்களைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இணையதள மைய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் மேலும் பேசியது:

    வரும் மக்களவைத் தேர்தலில் தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபடக் கூடாது என்பதையொட்டி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை அங்கீகரிக்கப்பட்ட இணையதள மையங்கள் மூலமாக மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இந்தப் பணிக்கு தேர்தல் ஆணைய வழிகாட்டுதலுடன் தகுதியான மற்றும் விதிமுறைகளுக்குள்படும் இணையதள மையங்கள் அங்கீகரிக்கப்படவுள்ளன. அங்கீகரிக்கப்படும் மையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விளம்பரப் பதாகை அமைக்க வேண்டும்.

    மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கென தனியே ஒரு கம்ப்யூட்டர், ஒரு யுபிஎஸ், ஒரு பிரிண்டர், டிஜிட்டல் வெப் கேமரா, பிராட்பேண்ட் இணைப்பு, ஸ்கேனர் ஆகியவற்றை மையத்தில் வைத்திருக்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் இதர திருத்தங்கள், இடமாற்றம் மற்றும் புகார்களைப் பதிவு செய்ய ஒரு நபருக்கு ரூ. 10 வீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். வாக்காளப் பட்டியல் விவரங்களை நகல் எடுக்க பக்கம் ஒன்றுக்கு ரூ. 3 மட்டுமே வசூலிக்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், வாக்குச் சாவடி பெயர், விண்ணப்பத்தின் நிலை, புகார் மனுவின் நிலை மற்றும் இதர விவரங்களைக் கோருவோரிடமிருந்து ரூ. 2 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.

    மேற்கண்ட விதிமுறைகள் மற்றும் கட்டணங்களுக்கு உள்பட்டு செயல்பட முன்வரும், இணையதள மையங்களின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தேர்தல் பிரிவை அணுகி உரிய அங்கீகாரம் பெறலாம் என்றார் ஆட்சியர்.

    அக். 1- முதல் சுருக்கத் திருத்தப் பணி

    பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் தெரிவித்தது:

    2014-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் வகையில், சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளுக்காக அக். 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்கள் வழங்கும் பணி நடைபெறும்.

    வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளும் திருத்தங்களுக்கு குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், அஞ்சலகக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், டெலிபோன் ரசீது, காஸ் இணைப்பு ரசீது, பள்ளிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை ஆதாரமாக சமர்ப்பிக்கலாம்.

    அக். 6, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தி விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை பொதுமக்கள் எளிதில் மேற்கொள்ளும் வகையில், இணைதள மையங்கள் மூலம் திருத்தப் பணி மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விதிமுறைகள் மற்றும் அறிவுரைகளுக்கேற்ப உரிய வசதிகள் கொண்ட இணையதள மையங்கள் அங்கீகரிக்கப்படும் என்றார் முனுசாமி.

    அப்போது, தேர்தல் வட்டாட்சியர் முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ. செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai