சுடச்சுட

    

    27-ல் இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம்: மீனவர்கள் முடிவு

    By நாகப்பட்டினம்  |   Published on : 22nd September 2013 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, செப். 27-ம் தேதி விசைப் படகுகளில் வெள்ளைக் கொடி ஏந்தி, இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம் நடத்துவதென 5 மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலிருந்து 9 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 65 பேர், கடந்த ஜூலை 30-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

    இதில், 34 பேரை மட்டும் விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்றம் கடந்த

    4-ம் தேதி உத்தரவிட்டது.

    இதனிடையே, எஞ்சிய மீனவர்களையும் மீன்பிடி படகுகளுடன் விடுவிக்கக் கோரி நாகை வட்டத்துக்குள்பட்ட 8 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் கடந்த 6-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பது குறித்து நாகையில் உள்ள ஓர் திருமணக் கூடத்தில் 5 மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    இதில்,ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களின் மீனவப் பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களையும், அவர்களின் விசைப் படகுகளையும் வரும் 25-ம் தேதிக்குள் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களை அழைத்துப் பேசி மீன்பிடித் தொழில் குறித்து பரஸ்பரம் தொழில் ஒப்பந்தம் ஏற்படுத்தக் கேட்டுக் கொள்வது.

    பிரதமர் மன்கோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை விளக்கி, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை, விசைப் படகுகளுடன் மீட்டுத் தர வலியுறுத்துவது.

    இலங்கையில் தஞ்சம்: மீனவர்களின் பிரச்னைகளுக்கு செப். 25-ம் தேதிக்குள் தீர்வு காணப்படவில்லையெனில்,   செப். 27-ம் தேதி நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும், விசைப் படகுகளில் வெள்ளைக் கொடி ஏந்தி இலங்கைக்குச் சென்று தஞ்சம் புகும் போராட்டம் நடத்துவது.

    தேர்தல் புறக்கணிப்பு: மேற்கண்ட தீர்மானங்களை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லையெனில், 6 மாவட்ட மீனவர்களும் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai