சுடச்சுட

  

  சீர்காழியில் பொதுப்பணித் துறை அலுவலகம் முற்றுகை

  By சீர்காழி,  |   Published on : 24th September 2013 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், சீர்காழி பகுதியின் வேளாண் பணிகளுக்கு ஆறு மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கோரி, சீர்காழி பொதுப் பணித் துறை நீர்வள ஆதார பாசனப் பிரிவு அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

  சீர்காழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். தற்போது சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா நெல் நாற்றங்கால் தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது.

  விவசாயப் பணிகளுக்காக ஆகஸ்ட் 2-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையிலும், காவிரியின் கடைமடை பகுதியான சீர்காழி மற்றும் சுற்றுப் பகுதிகளின் வேளாண் தேவைக்கேற்ப ஆறு மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் கிடைக்கவில்லை.

  சீர்காழி மற்றும் சுற்றுப் பகுதிகளின் வேளாண் பணிகளுக்கு ஆற்றுப் பாசனம் பொய்த்திருப்பதற்கு பொதுப் பணித் துறையின் அலட்சியப் போக்கே காரணம் எனக் குற்றம்சாட்டிய விவசாயிகள், திங்கள்கிழமை சீர்காழி பொதுப் பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு பாசனப் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

  கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்கம், புதுமண்ணியாறு பாசன விவசாயிகள் சங்கம், பழவாறு பாசன விவசாயிகள் சங்கம், பொறைவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

  சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, பொதுப் பணித் துறை அலுவலக முன்வாயில் இரும்பு கேட்டை மூடி, பொதுப் பணித் துறையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

  தூர்ந்து போன வாய்க்கால்களைத் தேடிப்பிடித்து தூர்வாரிய பொதுப் பணித் துறையினர், விவசாயப் பயன்பாட்டுக்குரிய வாய்க்கால்களை தூர்வாராமல் அலட்சியம் காட்டியதே தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்தனர்.

  சீர்காழி வட்டாட்சியர் பி. விஜயன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் ராமானுஜம், சீனுவாசன், பாரத் பானுசேகர், கல்யாணசுந்தரம், பாஸ்கரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, சீர்காழி பகுதிக்கான வேளாண் பணிகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கச் செய்ய உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai