சுடச்சுட

    

    நாகையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில், பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

    நாகை கல்லுக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சி. பாலசுப்பிரமணியன் (60). 2007, ஜூலை 15-ம் தேதி காரைக்கால்- நாகை அரசுப் பேருந்தில் பயணித்த பாலசுப்பிரமணியன், தம்பித்துரை பூங்கா அருகே பேருந்திலிருந்து இறங்கியபோது, பேருந்து இயக்கப்பட்டதால் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது, அவர் பயணித்த அரசுப் பேருந்தின் சக்கரம் பாலசுப்பிரமணியனின் காலில் ஏறியது. இதில் அவரது கால் பாதம் முற்றிலுமாக சேதமடைந்தது.

    இதுதொடர்பாக, பாலசுப்பிரமணியன் நாகை தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் நிறைவில், அரசுப் போக்குவரத்துக் கழகம் பாலசுப்பிரமணியனுக்கு ரூ. 56 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என 2009-ல் தீர்ப்பளித்தது. ஆனால், நஷ்டஈடு அளிக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து, பாலசுப்பிரமணியன் நாகை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுத் தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி சீனிவாசன், ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட நஷ்டஈடு தொகை ரூ. 56 ஆயிரத்துடன், காலத் தாமதத்துக்கான வட்டியையும் சேர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகம், பாலசுப்பிரமணியனுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கடந்த 2-ம் தேதி உத்தரவிட்டார்.

    குறிப்பிட்டபடி நஷ்டஈடு தொகையை வழங்காவிட்டால், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்தை ஜப்தி செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

    இருப்பினும், இந்த நஷ்டஈடு தொகை செப். 22-ம் தேதி வரை பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், நாகை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai