சுடச்சுட

    

    கருகும் பயிருக்கு நீர் கேட்டு திருமருகல் அருகே மறியல்

    By dn  |   Published on : 26th September 2013 12:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், திருமருகல் அருகே கருகும் நெல் பயிர்களைக் காப்பாற்ற ஆற்றுப் பாசனம் மூலம் தண்ணீர் அளிக்கக் கோரி விவசாயிகள் புதன்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரத்தில், முடிகொண்டான் ஆறு,  திருமலைராஜனாறு, அரசலாறு, வடக்குப் புத்தாறு, தெற்குப் புத்தாறு, வளப்பாறு, பிராவுடையான் ஆறு, ஆழியான் ஆறு, நரிமணி ஆறு ஆகிய ஆறுகள் மூலமான பாசனத்தில் 12,600 ஹெக்டேர் அளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அண்மைக்காலமாக வறண்ட வானிலை நீடித்துவரும் நிலையில், மேற்கண்ட ஆறுகளில் குறிப்பிடத்தக்க வகையில் பாசன நீர்வரத்து இல்லாததால், திருமருகல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நாற்றாங்கால் மட்டும் நடவு செய்யப்பட்ட நெல் பயிர்கள், தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.  இந்நிலையில், முடிகொண்டான் ஆற்றுப் பாசனத்தை பிரதானமாகக் கொண்ட போலகம் பகுதி விவசாயிகள், திருமருகல் அண்ணா மண்டபம் பிரதான சாலையில் புதன்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முன்னோடி விவசாயிகள், அரசியல் கட்சிகள் சார்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    தகவலறிந்த நாகை வட்டாட்சியர் பரிமளம், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் வில்வேந்தன் மற்றும் உதவி பொறியாளர்கள் இளங்கோ, சங்கர் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

    அப்போது தண்ணீர் வரத்துக்கேற்ப முடிகொண்டான் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப் பணித் துறை அலுவலர்கள் உறுதியளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்தப் போராட்டத்தால் நாகூர்- நன்னிலம் சாலைப் போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் தடைபட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai