சுடச்சுட

    

    மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: காரைக்காலில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

    By dn  |   Published on : 26th September 2013 11:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்களை சிறைபிடிப்பதைக் கண்டித்தும், இவ்விவகாரத்தில் மத்திய அரசு, புதுச்சேரி மாநில அரசுகள் நடந்துகொள்ளும் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் காரைக்காலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இலங்கை கடற்படையினர் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்களை சிறைபிடித்துச் செல்வதை தடுக்கவும், அங்கு சிறையில் உள்ள மீனவர்களை படகுடன் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாகை, காரைக்கால் மாவட்ட விடைப்படகு உரிமையாளர்கள் கடந்த 6-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காரைக்காலில் விசைப்படகு, பைபர் படகு உரிமையாளர்கள், மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள், புதுச்சேரி அரசு படகுக்கான டீசல் மானியம் தருவதை நிறுத்தியுள்ளதைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை மீன் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 2-ஆம் நாளாக புதன்கிழமை காரைக்காலில் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் நலனில் அக்கறையின்றி இருப்பதாகக் கூறி ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டையை  மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது, காரைக்காலில் தட்டேந்திப் போராட்டத்தில் ஈடுபடுவது, பந்த் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்திட முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் அத்துமீறி இந்திய கடல் எல்லையில் நுழைந்து கைது செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்தத் தவறிய மத்திய மற்றும், புதுச்சேரி மாநில அரசுகளைக் கண்டித்தும்  காரைக்கால் மாவட்ட அதிமுக வியாழக்கிழமை காலை 10.30-க்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

    தமிழக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மீனவர் பிரிவு செயலருமான கே.கே. கலைமணி தலைமை வகிக்கிறார். புதுச்சேரி மாநில அதிமுக செயலரும் எம்.எல்.ஏ.வுமான ஏ. அன்பழகன், காரைக்கால் மாவட்டச் செயலர் எம்.வி.ஓமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர் (மாநில ஜெயலலிதா பேரவை செயலர்), பி. புருஷோத்தமன், (மாநில துணைச் செயலர்), எல். பெரியசாமி (மாநில துணைச் செயலர்), ஏ. பாஸ்கர் ( மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலர்) மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.கே.கணபதி, வி.எம்.சி.வி.கணபதி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் காரைக்கால் மாவட்ட அதிமுகவை சேர்ந்தோரும், புதுச்சேரி பிராந்திய அதிமுக நிர்வாகிகளும், காரைக்கால் மாவட்ட மீனவர்களும் கலந்துகொள்கின்றனர். ஏற்பாடுகளை மாவட்டச் செயலர் எம்.வி. ஓமலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai