சுடச்சுட

    

    களப்பணி மேற்கொள்ளாததால் கருகிய நெற்பயிர்கள்

    By நாகப்பட்டினம்,  |   Published on : 28th September 2013 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிகாரிகள் களப் பணி மேற்கொள்ளாததால், மேட்டூரில் தண்ணீர்  இருப்பு இருக்கும் நிலையிலும், கடைமடை மாவட்டங்களில் நெற்பயிர்கள் கருகும் நிலையை அடைந்துள்ளது என்று நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்தார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் எம். ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ஞா. ஜெயராஜ், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ஆர். ரவீந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்வின் துரை, முன்னோடி வங்கி மேலாளர் கதிர்வேல் மற்றும் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

    ஏ. அலெக்ஸாண்டர்: குறுவை நெல் சாகுபடிக்காக மாவட்டத்தில் மேலும் கூடுதலாக 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு ரூ. 1,500-ஆக நிர்ணயிக்க வேண்டும். என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 26 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.

    மு. செல்லப்பன்: காவிரி உள்கோட்ட பகுதிகள் விளை நில பாசன ஆயக்கட்டு பகுதிகள் என்பதைக் கருத்தில் கொண்டு, முறை வைக்காமல் ஆற்றுப் பாசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சோமு. இளங்கோ: அரிச்சந்திரா நதியில் உவர் நீர் உள்புகுவதைத் தடுக்க, முதலியப்பன் கண்டிக்கு அருகில் தாற்காலிக தடுப்பணை அமைக்க வேண்டும்.

    குரு. கோபி கணேசன்: சிறப்பு தொகுப்புத் திட்டங்களின் கீழ் நீர்ப்பாசன பைப்புகள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் பைப் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    சா.வீ. ராமகிருஷ்ணன்: தேசியமய வங்கிகளில் பயிர்க் காப்பீடு இதுவரை ஏற்கப்படவில்லை. கடந்த ஆண்டு கடன் பெற்ற சர்வே எண்ணுக்கு மீண்டும் கடன் வழங்க வங்கிகள் மறுக்கின்றன. இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வருங்கால விவசாயப் பணிகள் பெரும் பிரச்னைக்குள்ளாகும்.

    எஸ். சம்பந்தம்: மேட்டூர் அணையில் 111 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால், கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆற்றுப் பாசனம் பொய்த்து, நெற்பயிர்கள் கருகும் நிலையை அடையத் தொடங்கியுள்ளன. தொடர்புடையத் துறைகளின் அதிகாரிகளை மேசைப் பணிகளைத் தவிர்த்து, களப் பணியாற்றச் செய்து, பாசன நீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.

    ஆட்சியர் து. முனுசாமி பேசுகையில், நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 22,682 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 15,939 ஹெக்டேர் பரப்பளவில் அறுவடை முடிந்துள்ளது. சம்பா சாகுபடிக்காக 3,900 ஹெக்டேரில் நாற்றங்கால் தயாரிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்குத் தேவையான அனைத்து வகையான இடுபொருள்களும் இருப்புக் கொள்ளப்பட்டுள்ளது. விவசாயப் பணிகளின் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai