சுடச்சுட

    

    நிகழ் கல்வி ஆண்டில் காலம் தாழ்த்தி பள்ளிகள் திறக்கப்பட்டதால், தனியார் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை காணாமல் போயுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை நாள்களிலும் பள்ளிகள் செயல்படுவது, பள்ளிக் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் செப். 18-ம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டு, செப். 24-ம் தேதியுடன் நிறைவுப் பெற்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான தேர்வு நடைபெற வேண்டும் என்ற அடிப்படையில், ஒரே காலத்தில் தேர்வுகள் தொடங்கப்பட்டு, ஒரே காலத்தில் நிறைவுப் பெற்றன.

    இதன் தொடர்ச்சியாக, செப். 25-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை என தொடக்கக் கல்வித் துறை அறிவித்தது. இந்த விடுமுறை அறிவிப்பு தொடக்கப் பள்ளிகளில் உரிய வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஆனால், நாகை மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமான அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இந்த விடுமுறை அறிவிப்பை கடைப்பிடிக்காமல், காலாண்டு தேர்வு விடுமுறை நாள்களையும் பள்ளி வேலை நாள்களாகப் பயன்படுத்தி வருகின்றன.

    நிகழ் கல்வியாண்டில் ஜூன் 1-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதால், தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு 220 பணி நாள்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் அனுமதியுடன் விடுமுறை நாள்களை, வேலை நாள்களாகப் பயன்படுத்துவதாக சில பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

    தேர்வு விடுமுறை என்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியான புத்தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக கடைப்பிடிக்கப்படும் வழிமுறை என்ற அடிப்படையில், தேர்வு விடுமுறை நாள்கள் பணி நாள்களாகக் கடைப்பிடிக்கப்படுவது, பள்ளிக் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது.

    விடுமுறை மற்றும் வேலை நாள்களை தங்கள் விருப்பத்துக்கேற்ப தனியார் பள்ளிகள் மாற்றியமைத்துக் கொள்வதை தொடக்கக் கல்வித் துறை இனிவரும் காலங்களிலும் அனுமதித்தால், அது சமச்சீர் கல்வி முறையையே கேள்விக்குறியாக்கிவிடும் என்கிறார்  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன்.

    இதுகுறித்து நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிவேலுவிடம் கேட்டபோது, ஜனவரி - டிசம்பர் வரையிலான காலத்தில் 220 பணி நாள்களை தனியார் பள்ளிகள் முழுமை செய்ய வேண்டும் என்ற காரணத்தால், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் அனுமதியுடன் சில தனியார் பள்ளிகள் காலாண்டு தேர்வு விடுமுறையில் இயக்கப்படுகின்றன.

    இந்தக் காலத்தில், பள்ளிக் குழந்தைகளின் கற்றல் திறனை வளர்க்கும் வகையிலான பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்படும். ஆனால், 2-ம் பருவ புத்தகங்களை கற்பித்தல் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai