சுடச்சுட

    

    22 நாள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

    By நாகப்பட்டினம்,  |   Published on : 29th September 2013 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களையும், அவர்களின் விசைப் படகுகளையும் விடுவிக்கக் கோரி 22 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த  நாகை வட்ட விசைப் படகு மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடித் தொழிலுக்குத் திரும்பினர்.

    நாகை மற்றும் காரைக்கால்  மாவட்டங்களிலிருந்து 9 விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 65 பேரை இலங்கைக் கடற்படையினர் கடந்த ஜூலை 30-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 34 பேர் பருத்தித்துறை ஜப்னா சிறையிலும், 31 பேர் திரிகோணமலை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இதில், பருத்தித்துறை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 34 மீனவர்களை விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்றத்தில் கடந்த 4-ம் தேதி  உத்தரவிடப்பட்டது. இருப்பினும், அவர்களின் விசைப் படகுகள் விடுவிக்கப்படாததால் 17 நாள்கள் இலங்கையிலேயே தங்கியிருந்த 34 மீனவர்களும், இந்திய தூதரகத்திடமிருந்து போதுமான உதவி கிடைக்காததால் படகுகளைத் திரும்பப் பெறாமலேயே கடந்த 22-ம் தேதி தமிழகம் திரும்பினர்.

    இதனிடையே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களையும், அவர்களின் விசைப் படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாகை வட்ட விசைப் படகு மீனவர்கள் கடந்த 6-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர், நாகை, காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவப் பஞ்சாயத்தாரின் ஆலோசனைக் கூட்டம், நாகையில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், செப். 27-ம் தேதி விசைப் படகுகளில் வெள்ளைக் கொடியுடன் இலங்கைக்குச் சென்று தஞ்சம் புகும் போராட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில், செப். 26-ம் தேதி நாகை வட்ட மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம் நாகையில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், படகுகளை மீட்டுத் தர தமிழக மீன்வளத் துறை அமைச்சர் உறுதியளித்திருப்பதால், இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை ஒத்திவைப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், இலங்கை திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 31 பேரும் செப். 27-ம் தேதி விடுதலை செய்யப்படும் நிலை உள்ளதால், விசைப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு, செப். 28-ம் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால், திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 31 பேரின் நீதிமன்றக் காவலை அக். 1-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில், செப். 26-ம் தேதி நாகை, காரைக்கால் மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்ட முடிவுப்படி, நாகை வட்ட விசைப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு சனிக்கிழமை இரவு முதல் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

    இதையொட்டி, சனிக்கிழமை பகல் நேரத்தில் விசைப் படகு மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான டீசல், ஐஸ்கட்டி, வலை உள்ளிட்டவைகளை விசைப் படகுகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

    கடந்த 22 நாள்களுக்குப் பின்னர் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதையொட்டி, விசைப் படகு மீனவர்களிடம் பரவலான உற்சாகம் காணப்பட்டாலும், தங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மூலம் குறிப்பிடத்தக்க உடனடி தீர்வு ஏதும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் அவர்களிடம் காணப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai