மயிலாடுதுறை, செப். 23: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் மயிலாடுதுறை, செம்பனார்கோயில் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் த. ராயர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் குருசந்திரசேகரன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டப் பலன்களை வழங்கவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசாணை 363-ன் மீது அளிக்கப்பட்ட விளக்கத்தை ரத்துசெய்து அனைத்து ஓய்வூதியர்களுக்கும், மரணமுற்றவர்களின் குடும்பத்தினருக்கும் நிலைவை தொகையை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளைத் தலைவர் கோ. கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சா. ஜெகதீசன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.