சுடச்சுட

  

  குத்தாலம் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரம்:  வேளாண் அதிகாரி தகவல்

  By  குத்தாலம்  |   Published on : 28th May 2014 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குத்தாலம் வட்டார விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரம் வழங்கப்படுகிறது என வட்டார வேளாண் உதவி இயக்குநர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   குத்தாலம் வட்டாரத்தில் தற்போது நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அடியுரமாக தழைச்சத்து, மணிச்சத்து, சம்பல்சத்து ஆகிய பேரூட்ட சத்துக்கள் இடுவதோடு, நெல் பயிருக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படும் நுண்ணூட்டச் சத்தான துத்தநாகச் சத்தையும் இடவேண்டும்.
   துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்பட்டால், நெற்பயிர் வளர்ச்சி குன்றி கட்டையாகவும், சமமற்ற உயரமுள்ள பயிராகவும், தூர் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும். அடி இலைகளின் நரம்பு பகுதிக்கு இடைப்பட்ட பகுதி வெளுத்து காணப்படும்.
   இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகளும், கோடுகளும் ஏற்பட்டு, இலையின் அளவு சுருங்கிவிடும். பயிரை பார்ப்பதற்கு துருப்பிடித்தது போல தெரியும். முடிவில் இலைகள் காய்ந்து பயிர் வளர்ச்சி நின்றுவிடும். இதனால், மகசூல் பாதிப்பு ஏற்படும்.
   எனவே, துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவு வயலில் ஏக்கருக்கு 10 கிலோ நன்கு பொடி செய்யப்பட்ட சிங்சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து நடவுக்கு முன்பாக மேலாக தூவி நடவு செய்ய வேண்டும். இந்த உரத்தை மண்ணில் இட்டபிறகு உழவு செய்யக் கூடாது.
   விவசாயிகளுக்கு சிங்சல்பேட் உரம் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில் குத்தாலம், பாலையூர், கோமல், மங்கநல்லூர் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai