Enable Javscript for better performance
அமலுக்கு வந்தது மீன்பிடித் தடைக்காலம்- Dinamani

சுடச்சுட

    

    மீன்களின் இனப்பெருக்கக் காலத்தையொட்டி, அரசு அறிவித்த மீன்பிடித் தடைக்காலம் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

    மீன்களின் இனப்பெருக்கக் காலத்தையொட்டியும், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் மே 29-ஆம் தேதி நள்ளிரவு வரையிலான 45 நாள்களை மீன்பிடித் தடைக்காலமாக அரசு அறிவித்துள்ளது.

    இதன்படி, நிகழாண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

    இதையொட்டி, ஏற்கெனவே கடலுக்குள் தங்கித் தொழில் செய்ய சென்றிருந்த மீன்பிடி விசைப் படகுகள் கடந்த சில நாள்களாக கரைத் திரும்பியுள்ளன.

    விசைப்படகு மீன்பிடித் தொழில் சுமார் 3 முதல் 6 நாள்கள் வரை நடைபெறக் கூடியது என்பதால் புதன்கிழமை முதலே விசைப் படகுகள், கடலுக்குள் செல்லவில்லை. இதனால், நாகை படகுத் துறையில் ஏராளமான விசைப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்தப் படகுகளிலிருந்து ஐஸ் பெட்டிகள், வலைகள், மிதவைக் குண்டுகள் உள்ளிட்டவைகளை வீட்டுக்குக் கொண்டுச் செல்லும் பணியை மீனவர்கள் வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

    இனிவரும் நாள்களில் விசைப் படகுகளில் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளும், வண்ணம் பூசும் பணிகளும் தொடங்கப்படும்.

    மீன் விலை உயரும்...

    மீன்பிடித் தொழிலுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், வரும் நாள்களில் மீன்வரத்து வெகுவாகக் குறையும்.

    கட்டுமரம் மற்றும் மாருதி படகுகள் மூலமான கரையோர மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் மீன்கள் மட்டுமே, வரும் நாள்களில் மீன் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியவை என்பதால், மீன்களின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai