Enable Javscript for better performance
கோரையாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் நீரொழுங்கி அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோரையாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் நீரொழுங்கி அமைப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி அருகே கோரையாற்றின் குறுக்கே ரூ.3 கோடியில் புதிதாக நீரொழுங்கி(ரெகுலேட்டர்) அமைக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து திருவாரூர் வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் டி.ரவிச்சந்திரன், திருத்துறைப்பூண்டி வெண்ணாறு வடிநில உப கோட்ட உதவிப் பொறியாளர் மூர்த்திராஜன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத்திரிகை செய்தி:
    மன்னார்குடி அடுத்த பைங்காட்டூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் கோரையாறு மூலம் விவசாய பாசனம் பெறும் ரெங்கநாதபுரம், வாட்டார், செல்லத்தூர், கடைத்தெரு, நல்லூர், சந்தனநல்லூர், பள்ளியூர், கறம்பக்குடி, திருக்களர் ஆகிய கிராமங்களுக்கு தண்ணீர் செல்கிறது.
    தட்டாங்கோவில் முள்ளியார் தலைப்பிலிருந்து 1300 கனஅடி தண்ணீர் எடுக்கப்பட்டு கோரையாறு பாசனம் பெறும் கிராமங்களுக்கு தண்ணீர் சென்றடைய 24 மணி நேரம் ஆனது. இதனால் விவசாயப் பணிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்ததுடன், கோரையாற்றில் நீரொழுங்கி(ரெகுலேட்டர்) அமைத்து தர வேண்டும் என 20 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
    அதையடுத்து நபார்டு வங்கி வழங்கிய ரூ.3 கோடியில், பைங்காட்டூர் கிராமத்தில் கோரையாற்றின் குறுக்கே புதிதாக, நீரொழுங்கி அமைக்கும் கட்டுமானப் பணி தொடங்கி அண்மையில் பணி முடிக்கப்பட்டது.
    தற்போது விவசாயப் பணிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பைங்காட்டூரில் கோரையாற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரொழுங்கி பயன்பாட்டிற்கு வந்ததை அடுத்து தற்போது இந்த நீரொழுங்கி மூலம் தட்டாங்கோயில் முள்ளியாறு தலைப்பிலிருந்து 984 கனஅடி மட்டும் தண்ணீர் எடுக்கப்பட்டு பைங்காட்டூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு 5 மணி நேரத்தில் சாகுபடிக்குத் தேவையான அளவுக்கு நீர் சென்றடைவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai