Enable Javscript for better performance
நடப்பு ஆண்டு காரீப் பருவம்: புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்- Dinamani

சுடச்சுட

    

    நடப்பு ஆண்டு காரீப் பருவம்: புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்

    By DIN  |   Published on : 08th October 2016 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வலங்கைமான் வட்டத்தில் நடப்பு ஆண்டு காரீப் பருவம் முதல் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடன் மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கு பிரிமியம் செலுத்த ஒரே மாதிரியான காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என வலங்கைமான் வேளாண் உதவி இயக்குநர் தேவேந்திரன் வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
    திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு காரீப் பருவம் முதல் புதிய காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வலங்கைமான் வட்டாரத்தில் பயிர் செய்யப்படும் முக்கிய பயிர்களான நெல், உளுந்து, பாசிப்பயிறு, பருத்தி, கரும்பு, வாழை ஆகிய பயிர்களுக்கு வருவாய் கிராம அளவிலும் கம்பு, சோளம், ராகி, தட்டைப்பயிறு, சூரியகாந்தி ஆகிய பயிர்களுக்கு பிர்கா அளவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
    கடன் மற்றும் கடன்பெறாத விவசாயிகளுக்கு பிரிமியம் செலுத்த ஒரே மாதிரியான காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இழப்புறுதி நிலையானது. திருவாரூர் மாவட்டத்திற்கு 70 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    அக்ரிகல்சரல் கிராப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த பயிர் காப்பீடு திட்டத்தில் காரீப் பருவத்தில் நெல் மற்றும் பயிறு வகை பயிர்களுக்கு காப்பீடு கட்டண ஈட்டுறுதி தொகையில் இரண்டு சதவீதமாகவும் ராபி பருவத்திற்கு 1.5 சதவீதமாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
    கரும்பு, பருத்தி மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஈட்டுறுதி தொகையில் 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டம் அதிக இடர்பாடு உள்ள தொகுப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உத்திரவாத மகசூலானது கடந்த 7 ஆண்டுகளில் பயிர் மதிப்பீட்டாய்வு மூலம் பெறப்பட்ட மகசூல் விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளபடுகிறது. விதைப்பு மற்றும் நடவு மேற்கொள்ள இயலாமை, அறுவடைக்குப் பின் இழப்புகள், சிறுபகுதிகளில் மட்டும் ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் பாதிப்பு ஆகியவற்றிற்கு மாநில அரசால் மகசூல் விவரம் சமர்ப்பித்த 60 நாட்களுக்குள் இழப்பீடு தொகை காப்பீடு நிறுவனத்தால் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்யும்பட்சத்தில் இயற்கை சீற்றங்கள் மற்றும் பருவம் தப்பிய மழை போன்ற இடர்பாடுகளால் பயிர் பாதிக்கப்படும்போது உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளிக்கும் பட்சத்தில் கண்காணிப்புக் குழு பாதிப்பை ஆய்வு செய்து இழப்பீடு தொகையை உரிய விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    அதன்படி சம்பா நெற்பயிருக்கு காப்பீடு தொகையாக ஏக்கர் 1-க்கு ரூ.25 ஆயிரத்திற்கு 1.5 சதவீதம் பிரிமீயம் தொகையாக ரூ. 375, ராபி பருவத்தில் பயிர் செய்யக்கூடிய உளுந்து மற்றும் பச்சை பயிர்களுக்கு காப்பீடு தொகையாக ஏக்கர் 1-க்கு ரூ.12 ஆயிரத்திற்கு 1.5 சதவீதம் பிரிமீயத்தொகை ரூ.180 செலுத்த வேண்டும்.
    எண்ணெய்வித்துப் பயிர்களான எள் பயிருக்கு காப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.10.500-க்கு 1.5 சதவீதம் பிரிமியத்தொகையாக ரூ.157.50-ம் பருத்திக்கான காப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்திற்கு 5 சதவீதம் பிரிமீயம் தொகை ரூபாய் ஆயிரம் செலுத்த வேண்டும்.
    விவசாயிகள் பிரிமியத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ உரிய காலக்கெடுவுக்குள் செலுத்தி பயன்பெறலாம்.
    கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கு பிரிமீயத்தொகை செலுத்த கடைசி தேதி சம்பா நெற்பயிருக்கு வரும் நவம்பர் 30 என வலங்கைமான் வேளாண் உதவி இயக்குநர் தேவேந்திரன் கூறியுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai