Enable Javscript for better performance
மின்வாரியம் சார்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பருவமழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு செய்துள்ளது.
    இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம், மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் (இயக்குதல் - பராமரித்தல்) எஸ். சத்தியநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    வடகிழக்குப் பருவமழைக் காலங்களில், மின் விபத்துகளை முற்றிலும் தவிர்ப்பதற்கு பொதுமக்கள் கீழ் கண்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
    மழை நேரத்தில், மின் கம்பங்களை உரசும் மரங்களின் அருகில் செல்லக்கூடாது. அதிவேக காற்றால் மின் கம்பிகள் அறுந்து விழவும் வாய்ப்புள்ளது. மின் கம்பத்தில் துணிகள் உலர்த்தும் கொடியைக் கட்டக் கூடாது.
    மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வுப் பெட்டிகள், புதை வடங்கள், இழுவைக் கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது.
    இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்லக் கூடாது. டி.வி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, தொலைப்பேசி ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடாது.
    மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டக் கூடாது. மின் கம்பங்களை பந்தல் காலாகப் பயன்படுத்தக் கூடாது. மின் பாதைகளுக்கு அருகில் விளம்பரப் பதாகைகள் வைக்கக் கூடாது.
    கட்டடத்தின் மாடியிலிருந்து சிறுவர்களை சிறுநீர் கழிக்க அனுமதிக்கக் கூடாது. மின் பாதைகளுக்கு அருகில் இரும்புக் கம்பிகள், பைப்புகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லக்கூடாது என செய்திக் குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai