Enable Javscript for better performance
"வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் ரூ. 1.34 கோடி நிதி ஒதுக்கீடு'- Dinamani

சுடச்சுட

    

    "வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் ரூ. 1.34 கோடி நிதி ஒதுக்கீடு'

    By DIN  |   Published on : 08th October 2016 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் வழங்க நாகை மாவட்டத்துக்கு ரூ. 1.34 கோடி நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும், வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்துக்கு நிகழாண்டில், மாநில அளவில் ரூ. 31.06 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாகை மாவட்டத்துக்கு ரூ. 1.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், பவர் டில்லர், சுழற்கலப்பை, குழிதோண்டும் கருவி, களையெடுக்கும் இயந்திரம், கதிரடிக்கும் இயந்திரம், தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான், தென்னை மரம் ஏறும் கருவி, நேரடி நெல் விதைப்புக் கருவி, டிராக்டர் மற்றும் பவர் டில்லர் ஆகியவற்றை மானியத்துடன் வாங்கி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    இதில், சிறு, குறு ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையும் மானியம் அனுமதிக்கப்படும் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச தொகை மானியமாக அனுமதிக்கப்படும். இந்த 2 மதிப்பீட்டில், குறைவான தொகையே மானியமாக அனுமதிக்கப்படும்.
    விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் இயந்திரங்கள், கருவிகளை வேளாண் பொறியியல் துறையின் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் பெற்ற உற்பத்தி நிறுவனங்களிலிருந்து தங்களின் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து மானிய உதவியுடன் கொள்முதல் செய்யலாம்.
    மானியத்துடன் வேளாண் கருவிகள் கோரும் விவசாயிகளின் விண்ணப்பங்கள், வேளாண் பொறியியல் துறையின் முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, மூதுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.
    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், நாகை நீலா தெற்கு வீதியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மயிலாடுதுறை கோட்ட விவசாயிகள், மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் -2, ஆதார் அட்டை நகல், சிட்டா அடங்கல் நகல், புல வரைபட நகல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, சாதிச் சான்று நகல், டிராக்டரில் இயங்கக் கூடிய கருவிகளுக்கு டிராக்டரின் பதிவுச் சான்று நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai