Enable Javscript for better performance
15 வயது பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    நாகை அருகே 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    நாகை அருகே தரங்கம்பாடி, ஆனைக்கோவில் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் நாகரத்தினம் (29). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
    2012, மே மாதம் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்று, அங்கு தனியாக இருந்த 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பொறையாறு போலீஸார் வழக்குப் பதிந்து நாகரத்தினத்தை கைது செய்தனர். மேலும், பாலியல் பலாத்காரம் காரணமாக அந்தப் பெண் கருவுற்று, குழந்தை பெற்றுள்ளார். இதுகுறித்த வழக்கு நாகை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக நாகரத்தினத்துக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செல்வசுந்தரி தீர்ப்பு வழங்கினார். மேலும், அபராதம் செலுத்தாவிட்டால் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    இதேபோல், அத்துமீறி நுழைந்ததற்காக 3 ஆண்டு சிறையும், ரூ. 1000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
    அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவருக்கு பிறந்த குழந்தைக்கும் ரூ. 2 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai