Enable Javscript for better performance
தகட்டூர் பைரவநாதர் கோயில் சேவார்த்திகள் மண்டபம் பயன்பாட்டுக்கு வருமா?- Dinamani

சுடச்சுட

  

  தகட்டூர் பைரவநாதர் கோயில் சேவார்த்திகள் மண்டபம் பயன்பாட்டுக்கு வருமா?

  By கே.பி.அம்பிகாபதி  |   Published on : 15th October 2016 07:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தகட்டூர் பைரவநாதர் கோயிலில் சுற்றுலாத் துறையின் உதவியோடு 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சேவார்த்திகள் தங்கும் மண்டபத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
  நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள தகட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பைரவநாதர் சுவாமி கோயில். இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது. தமிழகத்திலேயே ஸ்ரீ பைரவநாதர் சுவாமிக்கு தனியாக அமைந்த பெரிய அளவிலான கோயில் என்பதால் இத்தலம் சிறப்பு பெற்றதாக உள்ளது.
   பைரவரை வழிபட சிறப்பான நாளாகக் கருதப்படும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் ஏராளமான மக்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. திங்கள், வெள்ளிக்கிழமை நாள்களில் கோயிலின் சக்தி பீடத்தில் அமர்ந்து ராதாகிருஷ்ண சுவாமிகள் அளிக்கும் அருள்வாக்கை கேட்கவும், குழந்தைகள் இல்லாதோர் சன்னிதியில் நீராட்டு செய்யவும் பெண்கள் உள்ளிட்டோர் அதிக எண்ணிக்கையில் வருவர்.  இக் கோயிலில் திருமணங்கள், காதணி விழா, பெயர் சூட்டு விழா எனப் பல்வேறு சுப நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நிகழும். ஸ்ரீ பைரவர் சன்னிதியின் எதிரே காவல் தெய்வமாக அமைந்துள்ள ராவுத்தர் சுவாமியை வணங்கவும் ஏராளமானவர்கள் வருவது வழக்கம்.  
  இப்படி பல்வேறு நிலைகளில் சிறப்பு பெற்ற இந்தக் கோயில் வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் சேவார்த்திகள் தங்கும் மண்டபம் அமைக்க திட்டமிடப்பட்டது. சுற்றுலாத்துறையின் நிதி உதவியாக ரூ.15 லட்சம் அளிக்கப்பட்ட நிலையில், 50 சதவீத நிதியை அப்போதைய மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சி பயனளிக்கவில்லை. இதையடுத்து, கோயில் நிர்வாக உதவியோடு பணிகள் தொடங்கப்பட்டன.
   2008-இல் தொடங்கப்பட்ட இந்தப் பணி, சேவார்த்திகள்(பக்தர்கள்) தங்கவும்,திருமணங்கள் போன்ற பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாகவும் இரண்டு அடுக்கு மாடி கட்டடமாக அமைக்கப்பட்டது.
   மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வண்ணம் அடித்தல், கழிப்பறை வசதி போன்ற சில பணிகள் நீங்கலாக மற்ற அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    நல்ல நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட இந்த மண்டபம் பயன்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணமும் வீணாகி வருகிறது.
   எனவே, கட்டடத்துக்குத் தேவையாக உள்ள பணிகளையும் இனியும் காலம் தாழ்த்தாமல் செய்து கொடுத்து, அதை மக்களின் பயன்பாட்டுக்கு வழிவகை செய்யவேண்டும்.
   அவ்வாறு செய்வதால் கோயிலில் பொது மக்கள் நடத்தும் சுபவிழாக்களுக்காக ஏற்பாடு செய்யும் தாற்காலிக பந்தல் அமைக்க ஆகும் பெரும் தொகை மிச்சமாகும்.
  அத்துடன், குறைவான வாடகை நிர்ணயிக்கப்பட்டால் அது கோயிலுக்கு வரவாகவும் அமையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

  "விரைவில் திறக்கப்படும்'
  இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் பொறுப்பு வகிக்கும் (திருத்துறைப்பூண்டி கோயில் செயல் அலுவலர்) பாஸ்கரனிடம் கேட்டபோது அவர் கூறியது:
  ரூ.5 லட்சம் மதிப்பில் மின் இணைப்பு பணிகள் மேற்கொள்ளவும், ரூ.5 லட்சம் மதிப்பில் வண்ணம் அடித்தல் போன்ற பிற பணிகளை மேற்கொள்ளவும் திட்ட அறிக்கை தயாரித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகளை மேற்கொண்டு, கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai