சுடச்சுட

  

  வேதாரண்யம் அருகே வாய்க்காலில் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 22 பேர் காயம்

  By DIN  |   Published on : 04th September 2016 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்தனர்.
   கீழையூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று அக் கல்லூரி பணியாளர்கள், மாணவர்களை ஏற்றிக் கொண்டு, சனிக்கிழமை காலை வேதாரண்யம் பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றது. பேருந்தை மனோகரன் (56) ஓட்டிச் சென்றார்.
   அரிச்சந்திரா நதியின் ஒருபக்க கரையில் உள்ள தலைஞாயிறு - வேட்டைக்காரனிருப்பு சாலை வழியாகச் சென்றபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட பேருந்தை ஓட்டுநர் திருப்பியுள்ளார்.
   சாலையை விட்டு கீழே இறங்கிய பேருந்து, எதிர்பாராதவிதமாக ராஜன் வாய்க்காலில் கவிழ்ந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பேருந்திலிருந்த பணியாளர்கள், மாணவர்கள் என 22 பேருக்கு காயம் ஏற்பட்டது.
   இவர்களில் ஓட்டுநர் மனோகரன், விரிவுரையாளர்கள் ஜெனிதா(20), கல்பனா(26), மாணவி ரஞ்சிதா(19), மாணவர்கள் சரபோஜிராஜன்(18), முகேஷ்(17), அரவிந்த்(18), பாலாஜி(18), ஜெயச்சந்திரன்(18), கண்ணபிரான்(18) ஆகிய 10 பேர் நாகை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
   லேசான காயமடைந்த மற்ற 12 பேரும் தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பினர்.
   வாய்க்காலில் தண்ணீரின் அளவு மிகக் குறைவாக இருந்ததால் பெரும் பாதிப்பு ஏதும் நிகழவில்லை. தலைஞாயிறு போலீஸார், தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
   அமைச்சர் ஆறுதல்: தகவலறிந்த தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன், நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை விரைவாக கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், விபத்தில் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆறுதல் கூறினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி உடனிருந்தார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai