சுடச்சுட

  

  நாகை மாவட்டம், குத்தாலம் அருகே இறந்தவர் சடலத்தை வயல் வரப்பு மற்றும் வாய்க்கால் வழியாக சுமந்து சென்று அடக்கம் செய்யும் நிலை உள்ளதால், சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  குத்தாலம் வட்டம், அசிக்காடு கிராமம் அண்ணாநகர் மற்றும் வடக்குத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இறந்தால் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள சுடுகாட்டுக்கு சடலத்தை தூக்கிச் சென்று தான் அடக்கம் செய்ய வேண்டும். இதில் சுமார் 1 கி.மீ. மண் பாதையிலும், 1 கி.மீ. வயல் வரப்புகளிலும் சென்று, அதன்பிறகு வாய்க்காலில் இறங்கி சுடுகாட்டை அடைய வேண்டும்.
  4 பேர் ஒன்றாக பாடையை சுமந்து செல்ல முடியாத ஒத்தையடி பாதை. சுடுகாட்டுக்கு மேற்கூரை இல்லை. சடலத்தை எரிக்கும்போது, மழை வந்தால் அன்றைக்கு சிவாராத்திரி தான். மழை நின்ற பிறகே சடலத்தை எரிக்க முடியும்.
  ஈமக்கிரியை மண்டபமாக வரப்பை பயன்படுத்தி காரியங்களை செய்து செல்லும் நிகழ்ச்சி ஆண்டாண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. அசிக்காட்டைச் சேர்ந்த துரையின் மனைவி மீனா (55), அண்மையில் இறந்தார். அவரது சடலத்தை வயல் வரப்பு மற்றும் வாய்க்கால் வழியாகவே சுமந்து சென்றுதான் அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது.
  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: சுடுகாட்டு பிரச்னைக்காக பல போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், அடுத்தமுறை யாரேனும் இறந்தால் சடலத்தை அடக்கம் செய்யாமல் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai