சுடச்சுட

    

    "மாணவர்கள் சகோதர மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியம்'

    By DIN  |   Published on : 06th September 2016 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்லூரி மாணவர்கள் சகோதர மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியம் என  நாகை மாவட்ட குற்றவியல் நீதிபதி கே. சிவக்குமார் தெரிவித்தார்.
    நாகை பாப்பாகோவில், சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் கேலி, வதை சட்ட விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
    முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட குற்றவியல் நீதிபதி கே. சிவக்குமார் பேசியது:
    நமக்குத் துன்பம் ஏற்படுத்தும் செயலை அடுத்தவர்களுக்கு செய்யக்கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டாலே கேலி செய்வதிலிருந்து மாணவர்கள் விடுபட முடியும். முதலாண்டு மாணவர்கள் இதை நினைவில் வைத்திருந்தால் ராகிங் என்பதே இருக்காது. தங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, முன்னேற்றம் ஆகியவை குழந்தைகளால் நிறைவேறும் என்ற எண்ணத்தில் உள்ள பெற்றோர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்.
    வரம்பும், அளவும் மீறுகிறபோது, கேலி செய்வது மிக மோசமான விளைவுகளை உண்டாக்குகிறது. இதை முற்றிலும் தவிர்க்கவும், தடுக்கவுமே கேலிவதைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கல்லூரியில் சீனியர் மாணவர்கள், ஜுனியர் மாணவர்களைப் பார்த்து கேலி செய்வதை விடுத்து, சகோதரர்களாக நினைக்க வேண்டும். கேலி செய்வது போன்றவற்றில் கவனத்தைச் செலுத்தாமல் கல்வியில் சாதனை புரிய வேண்டும். மாணவர்களுக்கு ராகிங் நடந்தால் கல்வி நிறுவனத்திலோ அல்லது காவல் துறையிலோ தெரிவிக்க வேண்டும் என்றார்.
    முகாமில் கேலிவதை தடுப்புச் சட்ட விதிமுறைகள் தொடர்பான கையேடு, அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.
    மாவட்ட நீதிபதிகள் எஸ். பக்கிரிசாமி, செல்வசுந்தரி, பி.எஸ். கெளதமன், கவிதா, வி. புவியரசு, வழக்குரைஞர் சங்கத் தலைவர் நடேச ஜெயராமன், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அன்பு, நீதிமன்ற மேலாளர் கலைவேந்தன், சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் த. ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி. கிப்ட்சன் சாமுவேல் வரவேற்றார். நிர்வாக அலுவலர் குமார் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai