சுடச்சுட

  

  மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 85 ஆயிரம் திருட்டு

  By DIN  |   Published on : 07th September 2016 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தின் இருக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 85 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
  மயிலாடுதுறை, தென்னமரச்சாலையைச் சேர்ந்தவர் ரெ. முத்துக்குமார் (48). ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் முகவராக உள்ளார். இவர், கடந்த ஆக. 31-ஆம் தேதி வங்கியிலிருந்து ரூ. 85 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு, அந்தப் பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் இருக்கையின் கீழ்ப்புறம் உள்ள பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றார்.
  மயிலாடுதுறை வள்ளலார் கோயில் அருகே உள்ள தனியார் பள்ளியின் முன்புற வாயில் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, தனது மகளை அழைத்துச் செல்வதற்காக பள்ளி வளாகத்துக்குள் சென்றார். அங்கு, சில நிமிடங்கள் காத்திருந்த அவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றபோது, இருசக்கர வாகனத்தின் இருக்கைப் பெட்டி உடைத்துத் திறக்கப்பட்டு, அதிலிருந்த ரூ. 85 ஆயிரம் ரொக்கம் மற்றும் வங்கி ஏடிஎம் அட்டைகள் திருட்டுப்போனது தெரியவந்தது.
  இதுகுறித்து முத்துக்குமார் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  விடியோ ஆதாரம்...
  இந்தத் திருட்டு நிகழ்வுகள் அனைத்தும் கண்காணிப்புக்  கேமராவில் பதிவாகியுள்ளன. இருசக்கர வாகனத்தில்  முத்துக்குமாரை பின் தொடர்ந்து, 3 இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களில் இருவர் மட்டும் கீழே இறங்கி நடந்து  சென்று முதலில் இருக்கைப் பெட்டியின் பூட்டை உடைக்க முயற்சிக்கின்றனர். இவர்களுக்குத் துணையாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திரும்பிச் செல்வதற்கு ஆயத்தமான நிலையில் காத்திருக்கின்றனர்.
  2 பேர் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருக்கும் முத்துக்குமாரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  பள்ளிக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேறத் தொடங்கும்போது, ஏற்கெனவே இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கி நடந்து வந்த தொப்பி அணிந்த நபர் ஒருவரும், மற்றொருவரும் முத்துக்குமாரின் இருசக்கர வாகனத்தின் இருக்கைப் பெட்டியை நெம்பித் திறந்து, அதிலிருந்த கைப்பையைத் திருடிக் கொண்டு, தயார் நிலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர்களுடன் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.
  அத்தனைப் பதிவுகளும் 2 கேமராக்களில் பதிவாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பரவலாகத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஒரு திருட்டுச் சம்பவத்தின் முழுமையான விடியோ பதிவு போலீஸாருக்குக் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai