சுடச்சுட

    

    வாய்மேடு சித்த மருத்துவமனைக்கு நிரந்தரக் கட்டடம் கட்டப்படுமா?

    By DIN  |   Published on : 07th September 2016 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு சித்த மருத்துவமனையின் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கு  நிரந்தரக் கட்டடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வாய்மேடு அரசு சித்த மருத்துவமனை,  முன்னர் கடைவீதியின் பட்டுக்கோட்டை சாலையில் செயல்பட்டு வந்தது. அரசு கட்டித் தந்த கட்டடத்தில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுடன்  செயல்பட்ட இந்த மருத்துவமனையில் மருத்துவ அலுவலர், உதவி மருத்துவர்,  செவிலியர்கள், கட்டுகட்டுபவர், மருந்தாளுநர் உள்ளிட்ட பணியிடங்களுடன் செயல்பட்டன.
    கிராமப்புறத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவமனை என்பதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயனடைந்தனர். காலப்போக்கில் இங்கிருந்த பணியிடங்கள் குறைக்கப்பட்டதோடு, மருத்துவமனை கட்டடமும் பராமரிக்கப்படாமல் போனது. இதனால், இந்த மருத்துவமனை வாய்மேடு கடைவீதிக்கு அருகில் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள சிறிய வாடகை கட்டடத்துக்கு 2007-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. இங்கு தற்போது, ஒரு மருத்துவர், பணியாளரோடு அதன் செயல்பாடு பெயரளவில் உள்ளது. டெங்கு காய்ச்சல், சிக்குன் குன்யா போன்ற நோய்களுக்கு அரசே மூலிகை வகை குடிநீர் (கசாயம்), சித்த மருந்துகளை வழங்கவும்,  பரிந்துரைக்கவும் செய்கிறது. இதனால், சித்த மருத்துவத்தை நாடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், சிகிச்சை அளிக்க போதிய இடமும், அடிப்படை வசதிகளும் இல்லாததால், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறது.
    புதிய கட்டடம் எப்போது?: மருத்துவமனை இயங்கிய பழைய  கட்டடம் பல ஆண்டுகளாக இடிக்கப்படாமல் பாழடைந்து கிடக்கிறது. இதன் அருகிலேயே டாஸ்மாக் கடை உள்ளதால், மதுபானக்கூடம்போல பயன்படுத்தப்பட்டு வண்டிகளில் ஏற்றும் அளவுக்கு பாலித்தீன் பைகள், கப்புகள்  குவிந்து கிடக்கின்றன. மேலும், இங்கு தண்ணீர், சிறுநீர் தேங்குவதால் நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
    பழுதடைந்து காணப்படும் இந்தக் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால்,  ஆபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது. இக் கட்டடத்தில் சில நேரங்களில் சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டில் இளைஞர் ஒருவர், இங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது.
    எனவே, வாய்மேடு சித்த மருத்துவமனையின் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் நிரந்தரமாக புதிய  கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai