சுடச்சுட

    

    சீர்காழி நகர் பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 27 விநாயகர் சிலைகள் உப்பனாற்றில் செவ்வாய்க்கிழமை இரவு விசர்ஜனம் செய்யப்பட்டன.
    விநாயகர் சதுர்த்தியையொட்டி, சீர்காழியில் ஆபத்துகாத்த விநாயகர், கணநாதர், ரயிலடி விநாயகர், சித்தி விநாயகர், மங்கள விநாயகர், செல்வ விநாயகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் 31 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை  செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    திங்கள்கிழமை 4 விநாயகர் சிலைகள் மட்டும்  விசர்ஜனம் செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 27 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
    முன்னதாக ஒவ்வொரு கோயிலிலும் பிரதிஷ்டை  செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வழிபாடு, தீபாராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பேண்டு வாத்தியங்கள், செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சீர்காழி பழைய பேருந்து நிலையப் பகுதியில் அணிவகுக்கப்பட்டன.
    பின்னர், 27 விநாயகர் சிலைகளுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது.
    தொடர்ந்து கச்சேரி சாலை, புதிய பேருந்து நிலையம், தென்பாதி வழியாகச் சென்று உப்பனாற்றில் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன.
    இதில் விநாயகர் சதுர்த்தி விழாக் குழுத் தலைவர் எஸ்.பி.ஆர். சரவணன், வி.எச்.பி. நிர்வாகி செந்தில்குமார், பாஜக நிர்வாகி வெத்தலை. முருகன் உள்ளிட்டோர் விநாயகர் சிலைகள் கரைக்க ஒருங்கிணைப்பு செய்தனர். இதேபோல், புதுப்பட்டினம், கொள்ளிடம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்து 13 விநாயகர் சிலைகள்  செவ்வாய்க்கிழமை இரவு கொள்ளிடம் ஆற்றிலும், பழையார் கடல் பகுதியிலும் கரைக்கப்பட்டன.
    திருவெண்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 17 விநாயகர் சிலைகள் பூம்புகார் கடலிலும், நாயக்கர்குப்பம், மடத்துக்குப்பம் பகுதி கடலிலும் புதன்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
    பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் அழகுதுரை, முருகவேல், சிவப்பிரகாசம், முருகேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai