சுனாமி எச்சரிக்கை செயல் விளக்க ஒத்திகை
By DIN | Published on : 09th September 2016 06:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாகை மாவட்டம், விழுந்தமாவடியில் சுனாமி எச்சரிக்கை செயல் விளக்க ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட நிர்வாகம் மூலம் இந்த ஒத்திகை நடைபெற்றது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டவுடன், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான கட்டுப்பாட்டுக் குழு மூலம், விழுந்தமாவடி கிராம குழுக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுபோல இந்த ஒத்திகை நடைபெற்றது. கடற்கரையோர தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த மக்களை அப்புறப்படுத்தி, மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக தங்க வைப்பது, கடலில் தத்தளிப்பவர்களை விரைந்து மீட்டு, முதலுதவி செய்வது உள்ளிட்டவைகளும், சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரான நடவடிக்கைகளும் இந்த ஒத்திகையில் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி மேற்பார்வையில் நடைபெற்ற, ஒத்திகையின் நிறைவில் அவர் கூறியது:
பொதுமக்களின் நலன் கருதி இந்த விழிப்புணர்வு ஒத்திகை நடத்தப்பட்டது. சுனாமி, புயல், வெள்ளம், நிலநடுக்கம் உள்ளிட்ட அனைத்து இயற்கை சீற்றங்கள் குறித்தும் பொதுமக்கள் 1077 என்ற கட்டணில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அறியலாம் என்றார் ஆட்சியர்.