சுடச்சுட

    

    மானியத்துடன் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 09th September 2016 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலவசமாக அல்லது அரசு மானியத்துடன் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நாகப்பட்டினம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அ. அற்புதம் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    வேளாண் பணிகளுக்கான தண்ணீர் தேவையில் 40 முதல் 60 சதவீதத்தை சேமிக்கும் வகையிலும், விவசாயிகள் குறைந்த தண்ணீரில் அதிக பரப்பு சாகுபடி செய்யும் வகையிலும் தமிழக அரசு, நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
    இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் (இலவசமாக) நுண்ணீர்ப் பாசனம் அமைக்க, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. ஒரு லட்சம் வரை வழங்கப்படுகிறது.
    இத்திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகள் காய்கனி பயிர்கள் சாகுபடிக்கு 2.5 ஏக்கருக்கும், இதர பயிர்களுக்கு 5 ஏக்கருக்கும் நுண்ணீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ளலாம். இதர விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 75 சதவீத மானியம் வழங்கப்படும்.
    நிகழாண்டில் தமிழகத்தில், 46,099 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்படி, பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ரூ. 245.6 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்காக ரூ. 69.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டத்தில், 271.05 ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ. 74.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
    இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், குடும்ப அட்டை நகல், கிராம அடங்கல், கணினி சிட்டா, நிலவரைபடம், சிறு குறு விவசாயிகள் அதற்கான வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்றுகளை இணைத்து, தொடர்புடைய பகுதிக்கான வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அல்லது வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குநரை 73730 88001 என்ற செல்லிடப்பேசி எண்ணில் அல்லது மாவட்டத் தோட்டக் கலை துணை இயக்குநரை 97860 63931 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai