சுடச்சுட

  

  அரசின் மின் இறைவை பாசனத் திட்டம் மேம்படுத்தப்படுமா?

  By கே.பி. அம்பிகாபதி  |   Published on : 10th September 2016 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெல் சாகுபடிக்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு வரும் நிலையில், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் தமிழக அரசின் பொது மின் இறைவை பாசனத் திட்டதை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  உபரி நீர் மற்றும் மழை நீரைப் பயன்படுத்தி ஆற்று தன்பாசனத்துக்கு வாய்ப்பில்லாத மேடான பகுதியிலும் நெல் சாகுபடியை மேற்கொள்ளும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் மின் இறைவை பாசனத் திட்டம். இதை தமிழக அரசே இலவசமாக ஏற்று நடத்துக்கிறது.
  இறைப்பு நீர்ப் பாசனத் திட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இத்  திட்டம் மாநிலத்திலேயே முதல் செயலாக்கம் 1951-இல் நாகை  மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த  தகட்டூர் கிராமத்தில் தொடங்கப்பட்டது.
  இதையடுத்து, இதே பகுதியில் 1955-இல்  மருதூர் வடக்கு, வாய்மேடு, 1962-இல்  தென்னடார், ஆய்மூர், ஓரடியம்புலம், வண்டுவாஞ்சேரி, உம்பளச்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன.
  நாகை மாவட்டத்தில் 12 இடங்களிலும்,திருவாரூர் மாவட்டத்தில் 12, தஞ்சை  மாவட்டத்தில் 5 என மாநிலத்தில் 29 இடங்களில் இந்தத் திட்டம்  செயலாக்கத்தில் உள்ளன.
  பொறிமனையில் 4 முதல் 6 வரையிலான எண்ணிக்கையில் நிறுவப்பட்ட மின் மோட்டார்கள் 25 முதல் 35 குதிரை சக்தித் திறன் கொண்டவையாகும். ஒவ்வொரு பொறிமனைக்கும் தனி மின் மாற்றிகள், மோட்டார் இயக்குபவர்,
  கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்கள், அவர்களுக்கான குடியிருப்புகள், தொலைபேசி வசதிகளுடன்  திட்டம் செயலாக்கத்தில் இருந்து வந்தது.
  அரசே மின்சாரம் அளித்து, செயல்படுத்தும் இத்திட்டத்தால்,  வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீர் பாசனம் செய்யப்பட்டு நெல் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தன.
  இதன்மூலம் ஒவ்வொரு இடத்திலும் சுமார் 400 முதல் 700 ஏக்கர் வரையிலான பரப்புகள் பாசனம் பெற்றன.
  கவனம் குறைந்த திட்டம்: காலப்போக்கில் இத்திட்டம் தொடர்பான கவனம் குறைந்தது. பெயரளவிலான பராமரிப்பு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமை,  நிதி ஒதுக்கீடு குறைவு போன்றவைகளால் இத்திட்டத்தின் செயல்பாடு சுணக்கமடைந்தது. இதனால், இத்திட்டத்தின் சேவையை விவசாயிகள் முழுமையாகப் பெற முடியவில்லை.
  மோட்டார்கள் முழு திறனை இழந்து, அதிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவும் குறைந்ததோடு நிரந்தரப் பணியாளர்கள் இல்லாமல் திட்டம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பொதுப்பணித்துறை மூலம் பராமரிக்கப்படும் இத்திட்டத்தின் பராமரிப்பு, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள அக்கினியாறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
  இதனால் கவனம் குறைவதாகக் கூறும் விவசாயிகள், அந்தந்த மாவட்டத்தில் செயல்படும் பொதுப்பணித்துறை அலுவலகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கின்றனர்.
  இதுகுறித்து தென்னடார் முன்னோடி விவசாயி தங்க. குழந்தைவேல் கூறியது:
  விவசாயிகளின் கோயிலாகக் கருதப்படும் இத் திட்டத்தின் பம்ப் செட்டை (பொறிமனை) முறையாகப் பராமரிக்க வேண்டும். தென்னடார் நிலையத்தில் உள்ள 6 மோட்டார்களில் ஓரிரு மோட்டார்கள் மட்டுமே, குறைந்த திறனுடன் செயல்படுகின்றன. மற்றவை  பழுதடைந்துள்ளன. நிரந்தரமான பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும் என்றார்.
  திட்டம் மேம்படுத்தப்படுமா?:
  தண்ணீர் பிரச்னை நிலவும் இந்த காலகட்டத்தில், அரசின் பொது மின் இறைவை பாசனத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மோட்டார்களை சீரமைப்பது, புதிதாக  அமைப்பது போன்ற பணிகளை செய்வதோடு, திட்டத்தின் நிர்வாகத்தை மாற்றியமைத்து, நிதி ஒதுக்கீடு செய்து  மேம்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai